
ஜெயலலிதா மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும், அதிமுகவை பொதுச் செயலாளர் சசிகலாவும், துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும்தான் வழிநடத்திச் செல்வார்கள் தங்க தமிழ் செல்வன் எம்எல்ஏ தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ் செல்வன், ஜெயலலிதா மறைந்தபோது, அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா பொதுக் குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட போது எதிர்ப்புத் தெரிவிக்காத ஓபிஎஸ் தனது பதவி போனவுடன் போர்க் கொடி தூக்குவது எப்படி நியாயம் என கேள்வி எழுப்பினார்.
டி.டி.வி.தினகரன் பெரியகுளம் தொகுதி எம்.பி.யாக வந்திருக்காவிட்டால் ஓபிஎஸ் என்ற நபரே இல்லை என தங்க தமிழ் செல்வன் தெரிவித்தார்.
ஆர்.கே,நகர் தொகுதி இடைத் தேர்தலில் டி.டி.வி.தினகரன்தான் போட்டியிடுவார் என்றும், அதில் அவர் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் கூறினார்.
டி.டி.வி.தினகரன், அங்கு வெற்றி பெற்றாலும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக நீடிப்பார் என தெரிவித்த தங்க தமிழ் செல்வன், டி,டி,வி,தினகரனுக்கு பதவி ஆசை என்பதெல்லாம் கிடையாது என்றும், ஜெயலலிதாவின் ஆட்சியையும், கட்சியையும் தொய்வில்லாமல் நடத்திச் செல்வதே அவரது லட்சியம் என கூறினார்.
அதிமுகவின் இரு அணி இணைப்புகள் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், ஓபிஎஸ் நிபந்தனைகள் இன்றி பேச்சு வார்த்தை நடத்த முன்வர வேண்டும் என கூறினார்.
தற்போது ஓபிஎஸ் விதித்துள்ள நிபந்தனைகளை ஏற்க முடியாது என்றும், நிபந்தனைகள் இன்றி வந்தால் ஓபிஎஸ்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் இல்லை என்றால் 100 சதவீதம் இணைப்புக்கு வாய்ப்பில்லை என தங்க தமிழ் செல்வன் தெரிவித்தார்.