
சசிகலா நினைத்திருந்தால் ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே எம்எல்ஏவாகவோ, அமைச்சராகவோ ஏன்? துணை முதலமைச்சராகக் கூட ஆகியிருக்கலாம் என டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கத் தமிழ் செல்வன் தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், சசிகலா குடும்பத்தினர் இல்லையென்றால் ஜெயகுமார் இன்று அமைச்சராக இருந்திருக்க முடியாது என்றார்.
அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா, துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இதை யாராலும் மாற்ற முடியது என தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் செயல்படும் இந்த அரசுக்கு டி.டி.வி.தினகரனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும், ஜெயலலிதாவின் திடட்டங்களை நிறைவேற்றும் வகையில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு இந்த ஆட்சி தொடர வேண்டும் எனவும் தாங்கள் விரும்புவதாக தங்க தமிழ் செல்வன் தெரிவித்தார்.
அரசை எடப்பாடி பழனிசாமி நடத்தட்டும்…கட்சியை டி.டி.வி.தினகரன் நடத்திச் செல்வார் என குறிப்பிட்ட தங்க தமிழ் செல்வன், அடுத்து மாவட்டம் தோறும் நடத்தப் போகும் பொதுக்கூட்டத்தைப் பார்த்தால் நாங்கள்தான் உண்மையான அதிமுக என அனைவரும் ஒத்துக் கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.