
எங்க பக்கம் இருக்கும் 18 எம்எல்ஏக்களில் யாராவது ஒருவரை நீங்கள் உங்கள் பக்கம் இழுத்துவிட்டால் நானும் உங்களுடன் வந்து விடுகிறேன் என டி.டி.வி.தினகரன் ஆதரவு தங்க தமிழ்செல்வன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்துள்ளார்.
தினகரனுக்கு ஆதரவு தெரிவித்திருந்த 18 எம்எல்ஏக்களையும் சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். தனபாலின் இந்த உத்தரவை எதிர்த்து 18 எம்எல்ஏக்களின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று ஒரு நீதிபதியும், செல்லாது என்று மற்றொரு நீதிபதியும் தீர்ப்பளித்தனர். இதையடுத்து இந்த வழக்கு தற்போது மூன்றாவது நீதிபதிக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
இந்நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் தங்க தமிழ்ச்செல்வன் நீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெறப்போவதாக அறிவித்தார். ஆனால் மற்றவர்கள் தொடர்ந்து வழக்கை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தனர். இதுதொடர்பாக சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்தில் ஆலோசனை நடந்தது.
டி.டி.வி.தினகரன் இல்லத்துக்கு தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல், செந்தில்பாலாஜி, பழனியப்பன், பாலசுப்பிரமணியன், மாரியப்பன் கென்னடி, பார்த்திபன், முத்தையா, ரங்கசாமி ஆகிய 9 பேரும், வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியனும் வந்திருந்தனர்.காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை பிற்பகல் 2.15 மணி வரை நீடித்தது
இதைத் தொடாந்து செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்செல்வன் நாங்கள் 18 பேரும் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் அதற்கு தண்டனை கொடுத்து இருக்கிறார்கள். அதை எதிர்த்து 17 எம்.எல்.ஏ.க்கள் வழக்கை தொடர்ந்து நடத்த முடிவு செய்து இருக்கிறார்கள். நான் வழக்கை வாபஸ் பெறுகிறேன். இந்த முடிவை பின்னணியாக வைத்துக்கொண்டு ஆளும் அரசு, எதிர்க்கட்சி, உளவுத்துறை திரித்து பேசுகிறது என தெரிவித்தார்..
18 எம்எல்ஏக்கள் அரசு பக்கம் வந்தால் வரவேற்பதாக முதலமைச்சர் கூறியிருக்கிறார். அவருக்கு ஒன்று சொல்லுகிறேன் எங்கள் பக்கம் இருந்து ஒரு எம்.எல்.ஏ.வை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இழுத்துவிட்டால், நானே அவர்கள் பக்கம் போய்விடுகிறேன் என அவர் சவால் விடுத்துள்ளார்.
அதை செய்ய முடியவில்லை என்றால், அவர்கள் அனைவரும் எங்கள் பக்கம் வர முடியுமா? இந்த சவாலை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? என தங்க தமிழ் செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.