
மக்கள் ஜனநாயக கட்சியும், பாஜகவும் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து ஜம்மு-காஷ்மீரை தீயில் கொளுத்திவிட்டார்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மிகக் கடுமையாக விமர்சன்ம் செய்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, மக்கள் ஜனநாயக கட்சியும் , பாஜகவும் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தியது. அண்மைக்காலமாக இந்த இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணியில் மனகசப்பு அதிகரித்துக்கொண்டே இருந்து வந்தது. மெகபூபா மற்றும் பாஜக தலைவர்களிடையே கடும் பனிப்போர் நிலவி வந்தது
இந்த நிலையில், மக்கள் ஜனநாயக கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக பாஜக இன்று திடீரென அறிவித்தது. மேலும் அக்கட்சிக்கும் அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் பாஜக காஷ்மீர் கவர்னருக்கு கடிதம் அளித்தது.
இதையடுத்து, மெகபூபா முப்தியும் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் , மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ.க. கூட்டணி தலைமையிலான சந்தர்ப்பவாத கூட்டணி அரசு நமது தீரம்மிக்க ராணுவ வீரர்கள் உள்பட பலரை பலிகொடுத்து காஷ்மீரை தீயில் இட்டு கொளுத்திவிட்டது என குற்றம்சாட்டியுள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தின் கடுமையான உழைப்பை வீணாக்கி, நாட்டுக்கு இழப்பையும் ஏற்படுத்தியது. ஜனாதிபதியின் தலைமையிலான கவர்னர் ஆட்சியிலும் இதன் சேதாரம் தொடரும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்..