ஆட்சி நிர்வாகத்தை ஆளுநரிடம் கொடுத்தாவது இதையெல்லாம் நிறைவேற்றுங்க..! கர்நாடக அரசை கதிகலங்கவிடும் ராமதாஸ்

First Published Jun 19, 2018, 5:42 PM IST
Highlights
ramadoss emphasis to union government regarding cauvery issue


அரசியலமைப்பு சட்டத்தின் 365வது பிரிவைப் பயன்படுத்தி கர்நாடக மாநிலத்தின் நிர்வாகப் பொறுப்பை ஆளுநரிடம் ஒப்படைத்து கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பது, மேலாண்மை வாரியம் அமைப்பது  உள்ளிட்ட கடமைகளை மத்திய அரசே நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரியில் தமிழகம் அதன் பங்கு தண்ணீரைப் பெற கர்நாடகம் எத்தகைய முட்டுக்கட்டைகளைப் போடும் என்று எதிர்பார்க்கப்பட்டதோ, அவற்றை கர்நாடக முதல்வர் குமாரசாமி அரங்கேற்றத் தொடங்கி இருக்கிறார். நாடாளுமன்றத்தில் விவாதித்து ஒப்புதல் பெற்ற பிறகு தான் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்திருக்க வேண்டும் என்று முதல்வர் குமாரசாமி கூறியிருப்பது அதைத் தான் காட்டுகிறது.

காவிரி பிரச்சினைக்கான தீர்வை காவிரி நடுவர் மன்றம் 17 ஆண்டு கால விசாரணைக்குப் பிறகு கடந்த 2007 ஆம் ஆண்டு வழங்கியது. அத்தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அடுத்த 3 மாதங்களில் அமைத்திருக்க வேண்டும். ஆனால், கிட்டத்தட்ட 11 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இம்மாதம் தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது.

இது நடுவர் மன்றம் பரிந்துரைத்த காவிரி மேலாண்மை வாரியத்தை விட அதிகாரம் குறைந்த அமைப்பு தான் என்றாலும் கூட, காவிரி சிக்கலுக்கு ஏதாவது ஒரு வகையில் தீர்வு ஏற்பட்டால் நல்லது என்ற எண்ணத்தில் அந்த ஏற்பாட்டை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. இது ஒருவகையில் தியாகம் ஆகும். தங்களின் உரிமைகளை ஓரளவு இழந்துள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களே இந்த ஏற்பாட்டை ஏற்றுக்கொள்ளும் போது, இதனால் பயனடையக் கூடிய மாநிலமான கர்நாடகம் இதை ஏற்று செயல்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால், வழக்கம் போலவே கர்நாடக வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியிருக்கிறது. கர்நாடக அணைகளின் நீர்மட்டத்தை 10 நாட்களுக்கு ஒருமுறை அளவீடு செய்வதற்கான அதிகாரமும், கர்நாடக விவசாயிகள் எத்தகைய பயிர்களை பயிரிட வேண்டும் என்று அறிவுறுத்தும் அதிகாரமும் மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது அறிவியல்பூர்வமற்ற நடவடிக்கை; இது எங்களுடைய விவசாயிகளுக்கு இழைக்கப்படும் தீங்கு ஆகும் என்று குமாரசாமி கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி, நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரையும் அவர் சந்தித்திருக்கிறார். மற்றொருபுறம் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக நீர்ப்பாசன அமைச்சர் சிவக்குமார், காவிரி ஆணையத்திற்கு கர்நாடக உறுப்பினரை உடனடியாக நியமிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

கர்நாடக முதல்வர் குமாரசாமி, நீர்வளத் துறை அமைச்சர் சிவக்குமார் ஆகிய இருவரும் சொல்ல விரும்பும் செய்தி ஒன்று தான். காவிரி மேலாண்மை ஆணையத்தை கர்நாடகம் ஏற்றுக் கொள்ளாது என்பதைத் தான் அவர்கள் வேறு வேறு வார்த்தைகளில் கூறிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை என்று கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறிவிட்டது. இது கர்நாடக ஆட்சியாளர்களுக்கு நன்றாக தெரிந்திருந்தும், தமிழக உரிமைகளை மறுப்பதற்காக இவ்வாறு கூறுகின்றனர்.

கர்நாடகத்தின் இந்த செயல் காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் தீர்ப்புகளையும், மத்திய அரசின் நடவடிக்கைகளையும் அவமதிக்கும் செயலாகும். இதை மத்திய அரசு தொடர்ந்து அனுமதிக்கப் போகிறதா? அல்லது கடந்த காலங்களைப் போலவே வேடிக்கைப் பார்க்கப் போகிறதா? என்பது தான் இப்போதைய கேள்வி. இதற்கான விடையை மத்திய அரசு வார்த்தைகளில் அல்லாமல், செயலில் காட்ட வேண்டும்.

காவிரி நீர்ப்பகிர்வு ஒப்பந்தத்தை புதுப்பிப்பதில் தொடங்கி, காவிரி நடுவர் மன்றம் அமைப்பதாக இருந்தாலும், காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான ஆணையத்தை அமைப்பதாக இருந்தாலும், இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைப்பதாக இருந்தாலும் கர்நாடகத்திற்கு மத்தியில் இருந்த அரசுகள் தேவைக்கும் அதிகமாகவே கால அவகாசமும், சலுகைகளும் வழங்கியுள்ளன. அதன்விளைவாகவே அணைகளில் 56 டிஎம்சிக்கும் கூடுதலாக தண்ணீர் இருக்கும் போதிலும், அதில் தமிழகத்தின் பங்கை வழங்க மறுப்பதுடன், காவிரி ஆணையத்தையே ஏற்க மாட்டோம் என்று கூறும் அளவுக்கு கர்நாடகத்துக்கு துணிச்சல் வந்துள்ளது.

தமிழகத்தின் உரிமைகளை மறுப்பதற்காக சட்டத்திற்கும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் எதிரான நடவடிக்கைகளை கர்நாடகம் மேற்கொண்டு வரும் நிலையில், தமிழக ஆட்சியாளர்களோ காவிரி உரிமையை வென்றெடுத்து விட்டதாகக் கூறி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் போது, ஆட்சியாளர்கள் வெற்றி விழா கொண்டாடுவது மிகவும் குரூரமான நகைச்சுவை ஆகும். அணைகளில் 56 டிஎம்சி தண்ணீர் இருந்தாலும் கூட தமிழகத்துக்கு தர மறுக்கும் கர்நாடகத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவோ, தண்ணீர் பெற்றுத் தரும்படி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவோ முடியாத அரசு தமிழகத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒன்று தான். இவர்களை வரலாறும், மக்களும் மன்னிக்க மாட்டார்கள்.

காவிரி பிரச்சினை குறித்த தீர்ப்பை செயல்படுத்தும் பொறுப்பை மத்திய அரசுக்கு தான் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது என்பதால், தமிழகத்திற்கு நீதி வழங்கும் கடமையை மத்திய அரசு தான் நிறைவேற்ற வேண்டும். நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் நிர்ணயித்தவாறு தமிழகத்திற்கு நீர் பெற்றுத் தருதல், இப்போது அமைக்கப்படவுள்ள மேலாண்மை ஆணையத்திற்கு பதிலாக, அதைவிட கூடுதல் அதிகாரம் கொண்ட, கர்நாடக அணைகளை அதன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளக்கூடிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தல் ஆகிய நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இது குறித்த தங்களின் உத்தரவுகளை கர்நாடகம் ஏற்க மறுத்தால், அரசியல் சட்டத்தின் 365 ஆவது பிரிவின்படி அங்கு அரசியலமைப்புச் சட்டப்படியான கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக அறிவித்து, கர்நாடகத்தின் நிர்வாகப் பொறுப்பை ஆளுநரிடம் ஒப்படைத்து கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பது உள்ளிட்ட கடமைகளை மத்திய அரசே நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசும் இதை வலியுறுத்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
 

click me!