
கனிமொழி எங்கே, தளபதி எங்கேனு தேடவில்லை. துரை இல்லையா?’ என்றுதான் கேட்டார் தலைவர் என கருணாநிதிக்கும், தலைமைக் கழக முதன்மை செயலாளரான துரைமுருகனுக்கும் இடையே இருக்கும் பாச உறவைப் பற்றி கனிமொழி எம்.பி. மேடையில் பேச துரைமுருகன் உள்ளிட்டவர்கள் கண் கலங்கிவிட்டார்கள்.
வேலூர் மாவட்டத்தில் மகளிரணி ஆய்வுக் கூட்டம் மற்றும் கருணாநிதியின் 95ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்துக்காக கனிமொழி நேற்று வேலூரில் பயணம் மேற்கொண்டார்.
நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் துரைமுருகன் முன்னிலையில் பேசிய கனிமொழி, “கலைஞரின் பிள்ளைகளான நாங்கள் அவரோடு பழகிய காலத்தை விட அதிக காலம் நண்பராக கலைஞரோடு பழகிய நமது கழக முதன்மைச் செயலாளர் அமர்ந்திருக்கிறார். அவருக்கும் தலைவர் கலைஞருக்குமான பாசம் சொல்லில் அடங்காதது. ‘துரை... வாய்யா...’ என்று தலைவர் சொல்லும்போதே அதில் அவ்வளவு பாசம் இருக்கும்.
ஒரு நாள் இரவு தலைவர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் தூங்கிக் கொண்டிருந்தார். திடீரென இரவு 1 மணிக்கு எழுந்துகொண்டார். நான் தான் பக்கத்தில் இருந்தேன். வேற யார் இருக்கா என்று கேட்டார். அருகே இருந்தவர்கள் பேரை எல்லாம் சொன்னேன். ‘துரை இல்லையா?’ என்று கேட்டார். நான், ‘எங்கே இருக்காங்கனு பார்க்குறேன்’ என சொல்லிவிட்டு, உடனே முதன்மைச் செயலாளருக்கு போன் போட்டேன். எங்க இருக்கீங்க என்று கேட்டேன்.
இப்பதான் காட்பாடி போயிட்டிருக்கேன் என்றார். தலைவர் உங்களைத் தேடினாரு,சரி நான் அவர்கிட்ட சொல்லிடறேன் என்றேன். உடனே அவர் வேண்டாம், அதெல்லாம் சொல்லாதே... தலைவர் என்னைத் தேடுறாருன்னா நான் பாதி வழியிலயே வந்துடறேன்’ என்று சொல்லிவிட்டு அதிகாலையிலேயே சென்னை திரும்பினார். அதுதான் பாசம். அதுதான் அன்பு. கட்சிக்காரர்களிடம் அவ்வளவு பாசம் காட்டக் கூடியவர்.
கனிமொழி எங்கே, தளபதி எங்கேனு தேடவில்லை. துரை இல்லையா?’ என்றுதான் கேட்டார் தலைவர். கட்சிக்கார்களை அந்த அளவுக்கு அரவணைத்தவர் அன்பு செலுத்தியவர் தலைவர் கலைஞர்’’ என்று குறிப்பிட்டார். கனிமொழி இப்படி பேசப் பேச துரைமுருகனுக்கு கண்கள் கலங்கிவிட அவரது பக்கத்தில் இருந்த நிர்வாகிகளும் கலங்கிவிட்டனர்.