ரஜினிக்கு லேடீஸ் ஆதரவு அமோகம்! அமோகம்: தாறுமாறு குஷியில் தமிழருவி மணியனின்..!

By Vishnu PriyaFirst Published Nov 19, 2019, 4:51 PM IST
Highlights

அழகு தமிழின் அம்சங்கள் குறையாமல் பேசிவரும் தமிழருவி மணியனை ‘ரஜினிகாந்தின் அறிவிக்கப்படாத பிரசார பீரங்கி’ என்று செம்ம நயமாக குறிப்பிட்டுள்ளது வாரம் இருமுறை வெளிவரும் அரசியல் பத்திரிக்கை ஒன்று.

அழகு தமிழின் அம்சங்கள் குறையாமல் பேசிவரும் தமிழருவி மணியனை ‘ரஜினிகாந்தின் அறிவிக்கப்படாத பிரசார பீரங்கி’ என்று செம்ம நயமாக குறிப்பிட்டுள்ளது வாரம் இருமுறை வெளிவரும் அரசியல் பத்திரிக்கை ஒன்று.
 
அந்த கமெண்ட்டுக்கு நியாயம் செய்வது போலவே தமிழருவியாரும் ரஜினிகாந்தை தாங்கு தாங்கென்று தாங்குகிறார். 2021 சட்டசபை தேர்தலின் மூலம் தமிழகத்தின் முதல்வராகப் போவது ரஜினிதான், ரஜினியேதான்! என்று மைக்குக்கு மைக் குரல் கொடுக்கிறார் தமிழருவி. 


தனக்கான பல தரப்பட்ட அரசியல் தளபதிகளை தேடிப்பிடித்து நியமித்து வரும் ரஜினியும், தானா சேர்ந்த தமிழருவியை தவிர்க்காமல் மிக தெளிவாகப் பயன்படுத்தி வருகிறார். ரஜினியின் அரசியல் மூவ்களும், யோசனைகளும், திட்டங்களும், தமிழருவி மணியனின் வார்த்தைகள் வழியாகத்தான் வெள்ளோட்டம் பார்க்கப்படுகின்றன! என்பதே உண்மை. 
 
சூழ்நிலை இப்படியிருக்க, ரஜினிகாந்தை போற்றிப் புகழ்ந்து பேட்டிகள் தட்டிவரும் தமிழருவி லேட்டஸ்ட்டாக அளித்திருக்கும் ஒரு  பேட்டியில்....”வெற்றிடம்! என்று ரஜினி சொன்ன ஒற்றை வரிக்காக எப்படி இரண்டு பெரிய கழகங்களும் அஞ்சி நடுங்குகிறார்கள் பாருங்கள். அரசியலில் ரஜினியின் வருகையால், ஸ்டாலினின் முதல்வர் கனவு கலைகிறது. எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் கொட்டி, இந்த ஆட்சியை தக்க வைக்கலாம் என்று நினைத்த எடப்பாடியாரின்  நம்பிக்கையும் தகர்கிறது. இந்த வேதனையாலேயே இருவரும் இணைந்து கொண்டு ரஜினியை தாக்குகிறார்கள்.” என்று  விளாசியிருப்பவர்....

“இந்த தேர்தலோடு அ.தி.மு.க.வின் சகாப்தம் முடிந்துவிடும். 2021 தேர்தலில் நேரடி போட்டி ரஜினிக்கும், ஸ்டாலினுக்கும்தன். அதில் நிச்சயம் ரஜினி ஜெயிப்பார். பெண்களின் ஆதரவு ரஜினிகாந்துக்கு அமோகம் அமோகமாக இருக்கிறது.” என்று சிலாகித்திருக்கிறார். 


இந்த நேரத்தில் ‘கமல்ஹாசனுக்கு பெண்கள் ஆதரவு இல்லை!’ என்று அவருக்காக அரசியல் களமாட துவங்கிவிட்டு பின் விலகி சென்ற பிரஷாந்த் டீம், ஒரு சர்வேயின் மூலம் சொல்லியது இந்த நேரத்தில் ஏனோ வந்து செல்கிறது. 
 

click me!