
தான் அமைச்சராக இருந்தபோது பல நல்ல திட்டங்களை கரூர் மாவட்டத்திற்கு செய்ய முயன்றபோது அவற்றை தம்பிதுரை எதிர்த்து வந்ததாகவும், தற்போதும் நல்ல திடடங்களை செயல்படுத்த விடாமல் தடுத்து நிறுத்துவதாகவும் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு தம்பிதுரையும், தமிழக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தொடர்ந்து தடையாக இருந்து வருவதாக நேற்று முன்தினம் அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ செந்தில் பாலாஜி போலீசில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகார் மனுவில் வரும் 28 ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாகவும் செந்தில் பாலாஜி குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த உண்ணா விரத போராட்டம் நடத்துவது குறித்து கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் செய்தியாளர்களிடம், செந்தில் பாலாஜி பேசினார்.
அப்போது, 2015 ம் ஆண்டு கரூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி துவங்க ஜெயலலிதா நிதி ஒதுக்கி உத்தரவிட்டார். இது குறித்து சட்டசபையில், 110வது விதியின் கீழ் அறிவிப்பும் வெளியிட்டதாக தெரிவித்தார்.
ஆனால் கரூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி துவங்குவதற்கு இதுவரை அரசாணை வெளியிடவில்லை என்றும் அதற்கு சாரணம் கரூரில் மருத்துவ கல்லூரி அமைவதை தம்பிதுரையும், அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கரும் தொடர்ந்து தடுத்து வருகிறார்கள் என்றார்.
கரூர் எம்.பி.,யாக இருந்தும் தம்பிதுரை, இதுவரை கரூர் தொகுதிக்கு எந்த நல்லதும் செய்யவில்லை. நான் அமைச்சராக இருந்து செய்ய நினைத்த நல்ல விஷயங்களையும் அவர் செய்யவிடாமல் தடுத்தார் என்றும் அவர் மீது குற்றம்சாட்டினார்.
தம்பிதுரைக்கு எதிராக மக்களை திரட்டி வரும் 28 ம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக கூறினார். அந்த போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி கிடைக்காவிட்டாலும், அறிவித்தபடி உண்ணா விரத போராட்டம் நடக்கும் என்றும் செந்தில் பாலாஜி உறுதிபடத் தெரிவித்தார்.