
பாஜகவுடன் அதிமுக கூட்டணி குறித்து மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தமிழக அரசியலிலும் அதிமுகவிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. முதல்வர் பழனிசாமி தலைமையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை தொடர்வதாக அமைச்சர்கள் தெரிவித்தாலும், தற்போதைய ஆட்சி, ஜெயலலிதாவின் ஆட்சி அல்ல என தினகரனும் அவரது ஆதரவாளர்களும் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்துவருகின்றனர்.
நீட் தேர்வு, உதய் மின் திட்டம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்ளிட்ட பல விவகாரங்களில் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிராக, பழனிசாமி அரசு செயல்பட்டதாகவும் அதனால் பெயரளவில் ஜெயலலிதாவின் ஆட்சி என சொல்கிறார்களே தவிர, தமிழகத்தில் பாஜகவின் பினாமி ஆட்சிதான் நடக்கிறது என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தினகரனும் விமர்சித்து வருகிறார்கள்.
இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு, அதற்கு மறுநாளே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு என நடந்த சம்பவங்களும் எதிர்க்கட்சிகள் மற்றும் தினகரனின் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவதாகவே அமைந்தது.
இந்நிலையில், பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டதால்தான் ஆர்.கே.நகரில் தோல்வியுற்றோம். அதனால் இனிமேல் பாஜகவுடன் ஒட்டும் கிடையாது. உறவும் கிடையாது என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
செல்லூர் ராஜூவின் கருத்துக்கு நேரெதிராக சக அமைச்சரான ராஜேந்திர பாலாஜி, பாஜகவுடன் கூட்டணி வைப்போம் என முரண்பட்ட கருத்தை தெரிவித்தார்.
பாஜகவுடனான உறவு தொடர்பாக அமைச்சர்கள் முற்றிலும் முரண்பட்ட கருத்துகளை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதோடு விமர்சனத்துக்கும் உள்ளானது.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரையிடம் பாஜகவுடனான உறவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தம்பிதுரை, மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக செயல்படுவது என்பது, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் நிலைப்பாடுதான். ஆனால், கட்சி ரீதியாக கூட்டணி என்பது வேறு. எனவே பாஜகவுடன் கூட்டணி தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான பன்னீர்செல்வமும் துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான பழனிசாமியும் தான் முடிவெடுப்பர் என தம்பிதுரை தெரிவித்தார்.