
திருவண்ணாமலை அருகே உறவினர்களுக்கிடையேயான பிரச்சனையில் நெல் வயலில் டிராக்டரை ஓட்ட உத்தரவிட்ட பெண் டிஎஸ்பி மீது நடவடிக்கை பரிந்துரைக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த காமக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது தம்பி தியாகராஜன். இருவரும் விவசாயிகள். இவர்களது குடும்பத்துக்கு சொந்தமான 16 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தின் உரிமை தியாகராஜனின் மகள் சாமுண்டீஸ்வரி பெயரில் உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் முறையாக பாகப்பிரிவினையும் செய்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் சுமார் ஒன்றே முக்கால் ஏக்கர் நிலம் தொடர்பான பிரச்னை சாமுண்டீஸ்வரிக்கும், அண்ணாமலை மகள் சாவித்திரிக்கும் இடையே இருந்து வந்தது. அந்த நிலத்தில் சாவித்ரி நெல் பயிரிட்டிருந்தார்.
இதையடுத்த பிரச்சனைக்குரிய இடத்தில் உள்ள நெற்பயிரை துணை காவல் கண்காணிப்பாளர் ஜெரீனா பேகம், நெல் வயலில் டிராக்டரை ஓட்ட உத்தரவிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.
அந்த வீடியோவில் நெல் வயலை அழிக்க வேண்டாம், என கதறியபடி டிராக்டருக்கு நடுவே பெண் விவசாயி சாவித்ரி விழும் காட்சி மனதை உருக்கும் விதமாக இருந்தது.
சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய வீடியோவில் டி.எஸ்.பி ஜெரீனா பேகம், 'உன் கையை ஒடித்துவிடுவேன்... ' என மிரட்டும் காட்சியும் இடம் பெற்றிருந்தது.
இதைத் தொடர்ந்து, நெற்பயிரை அழிப்பது, அநியாயம், உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மனித உரிமைகள் ஆணைய மாவட்ட நீதிபதி மகிழேந்தி, அந்த நிலத்தைப் பார்வையிட்டார். தொடர்நது செய்தியாளர்களிடம் பேசிய அவர், வழக்கு நிலுவையில் இருக்கும்போது டி.எஸ்.பி ஜெரீனா பேகம் எடுத்த நடவடிக்கை மனித உரிமைகளுக்கு எதிரானது. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கச் செயல். உறவினர்களுக்குள் இருக்கும் பிரச்னைக்காக நெல் வயலை உழுதது ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து டி.எஸ்.பி ஜெரீனா பேகம்மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.