ராமநாதபுரத்துக்குள் நுழைந்த 19 தீவிரவாதிகள் ! ரயில் நிலையங்களில் குண்டு வெடிக்கும் !! பகீர் தகவல் !!

By Selvanayagam PFirst Published Apr 27, 2019, 8:20 AM IST
Highlights

ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள் நுழைந்துவிட்டதாகவும், தென்னக ரயில் நிலையங்களில் குண்டு வெடிக்கும் என்றும் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் இதனால் அலர்ட்டாக இருக்க வேண்டும் என்றும் பெங்களூரு போலீஸ் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஓசூரில் இருந்து நேற்று பகலில் மர்ம ஆசாமி ஒருவர் போனில் பேசி திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். அதில் ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, தெலுங்கானா, மராட்டியம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில், முக்கியமான நகரங்களில் குண்டு வெடிக்கும் என்றும், ராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் இதற்காக நுழைந்துள்ளார்கள் என்றும், குறிப்பாக தென்னக ரெயில்களில் குண்டு வெடிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் தகவலை கூறிவிட்டு, அந்த மர்ம நபர் போனை வைத்துவிட்டார்.

இந்த தகவலையொட்டி, பெங்களூரு போலீசார் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பியுள்ளனர்.  இந்த தகவலை முக்கியமான தகவலாக கருதி, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெங்களூரு போலீசார் கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து தமிழக ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், ரெயில்வே டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், தமிழகம் முழுவதும் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், சோதனை நடவடிக்கைகளும் நேற்று முதல் தீவிரப்படுத்தப்பட்டது.

மேலும், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வாகன சோதனை, லாட்ஜ்களில் சோதனை, முக்கியமான பகுதிகளில் கண்காணிப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. 

click me!