காவல் நிலைய வாசலில் வைத்து பாஜக முக்கிய புள்ளிக்கு நடந்த பயங்கரம்.. ஜாமினில் வெளியே வந்தபோது சம்பவம்.

By Ezhilarasan BabuFirst Published Sep 1, 2021, 9:51 AM IST
Highlights

இந்தநிலையில் நேற்று காலை 10 மணி அளவில் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு வெளியே வந்த அவரை சொகுசுக் காரில் வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் காவல் நிலைய வாசலில் வைத்தே கடத்திச் சென்றது. 

சென்னையில் சிறைக்குச் சென்று நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த பா.ஜ.க கட்சியின் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்ட நபரை காவல் நிலையத்துக்கு வெளியில் வைத்தே கடத்திச் சென்ற 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராணிப்பேட்டை தொகுதி சட்டமன்ற வேட்பாளராக கடந்த 2016 ஆம் ஆண்டு போட்டியிட்டவர் நாகராஜ். இவர் வங்கியில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி கோடிக் கணக்கான ரூபாயை மோசடி செய்த வழக்கில் கடந்த ஜூலை மாதம் சாஸ்திரி நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சிறையிலிருந்து நிபந்தனை ஜாமினில் சமீபத்தில் வெளியே வந்த இவர் தினந்தோறும் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார். 

இந்தநிலையில் நேற்று காலை 10 மணி அளவில் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு வெளியே வந்த அவரை சொகுசுக் காரில் வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் காவல் நிலைய வாசலில் வைத்தே கடத்திச் சென்றது. இதனையடுத்து சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் அடையாறு காவல் உதவி ஆணையர் நெல்சன் தலைமையிலான தனிப்படை போலீசார் நிபந்தனை ஜாமின் பெற்ற குற்றவாளியை கடத்திச் சென்ற நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கடத்திச் சென்று போரூரில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடத்தில் வைத்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் நாகராஜை மீட்டு அவரை கடத்திச் சென்ற மனோகரன் (36), விஜய் (31), சிவகுமார் (45), அலெக்ஸ்(36), ஐயப்பன் (29), கன்னியப்பன்(34), மணிகண்டன் (28), சத்யசாய் பாபா (40) ஆகிய 8 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட 8 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் நாகராஜ் மனோகர் என்பவரிடம் தொழில் தொடங்க 1 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி 10 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதன் காரணமாகவே அவரிடம் இருந்து பணத்தை திரும்பப் பெறும் பொருட்டு மனோகர் தனது நண்பர்களுடன் சேர்ந்து காவல் நிலைய வாசலில் வைத்து நாகராஜை கடத்தியுள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து 8 பேர் மீது கடத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சிறையில் அடைத்தனர்.
 

click me!