பயங்கர அதிர்ச்சி..லண்டனில் இருந்து தமிழகம் வந்த 2756 பேர்.. புதியவகை வைரஸ் தொற்று உள்ளதா என பரிசோதிக்க உத்தரவு

By Ezhilarasan BabuFirst Published Dec 23, 2020, 12:43 PM IST
Highlights

புதிய வகை வைரஸ் பிரிட்டன் முழுவதும் வேகமெடுத்துள்ளதால், கனடா, அயர்லாந்து, நெதர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம், சவுதிஅரேபியா, சிலி, அர்ஜென்டினா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களை ரத்து செய்துள்ளன. 

பிரிட்டனில்  புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் எதிரொலியாக கடந்த ஒரு மாதத்தில் லண்டனில் இருந்து தமிழகம் வந்த 2,756 பயணிகளின் பெயர் விலாசம் பெறப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் லண்டனில் இருந்து புறப்படுவதற்கு 96 மணி நேரத்திற்கு முன்னர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே  தமிழகம் வந்துள்ளனர். ஆனாலும் அதில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி வருவதால், அவர்கள் அனைவரையும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பெரும்பாலான நாடுகள் பிரிட்டன் உடனான விமான போக்குவரத்தை துண்டித்துள்ளன. கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க முதல்முதலாகப் பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்துக்கு அனுமதி அளித்தது பிரிட்டன் அரசு தான். ஆனால் தற்போது அங்கு புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அங்கு கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் லண்டன் நகர சாலைகளில் மக்கள் கூட்டம் பெருமளவில் குறைந்துள்ளது. அதேபோல் பிரிட்டனுடனான எல்லைகளை பல்வேறு நாடுகள் மூடி விட்டதால், சரக்குகளை ஏற்றி வரும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் எல்லையில் சாலையில் அணிவகுத்து நிற்கின்றன. 

புதிய வகை வைரஸ் பிரிட்டன் முழுவதும் வேகமெடுத்துள்ளதால், கனடா, அயர்லாந்து, நெதர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம், சவுதிஅரேபியா, சிலி, அர்ஜென்டினா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களை ரத்து செய்துள்ளன. வைரஸ் பரவலை தொடர்ந்து ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் லண்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த, 25 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிரிட்டனில் பரவிவரும் புதியவகை கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து வருகின்றனர். 

இதையடுத்து மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அண்டை மாநிலங்களுக்கு விமானம் மூலம் வந்து அங்கிருந்து பெரும்பாலானோர்  சாலை மார்க்கமாக தமிழகத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், தமிழக எல்லையிலும் போலீசாருடன் இணைந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். லண்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த 7 பேருக்கு இன்று காலை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஒருவருக்கு பிரிட்டனில் உள்ள புதிய வீரியிக்க வைரஸ் தொற்று  இருப்பது உறுதியாகி உள்ளதால், கடந்த ஒரு மாதத்தில் லண்டனில் இருந்து தமிழகம் வந்த 2,756  பயணிகளின் பெயர், முகவரி போன்றவற்றை சேகரித்து அவர்களை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

click me!