சாயக்கழிவுகளை குழாய் மூலம் கடலில் கலக்க பயங்கர திட்டம்..!! அரசுகள் தடுக்க வேண்டும் என திருமாவளவன் போர் கொடி.

By Ezhilarasan BabuFirst Published Jul 21, 2020, 11:43 AM IST
Highlights

மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, தோல்நோய்கள், நுரையீரல் பாதிப்பு, சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான பாதிப்புகளை மேலும் அதிகரிக்கச்செய்யும் என்னும் அச்சத்தால் இந்த சாயக்கழிவு ஆலைகள் திட்டத்திற்கு மக்கள் கடும்  எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

ஜவுளிப் பூங்கா- 'சைமா' சாயக்கழிவு ஆலை திட்டத்தைக் கைவிட வேண்டும் என மத்திய - மாநில அரசுகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது இது குறித்து  அக்கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:- கடலூர் மாவட்டம், பெரியபட்டு கிராமத்தில் ஜவுளிபூங்கா என்னும் பெயரில் சாயக்கழிவு ஆலைகள் அமைக்க, தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம்(SIMA -Southern India Mills' Association) என்ற பெயரில் இயங்கிவரும் தொழிலதிபர்களுக்கு சுமார் 450 ஏக்கர் விளைநிலம் '99ஆண்டு குத்தகை' அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அடிப்படையில் சாயக்கழிவுகளைக் கடலில் கலக்கச் செய்வதுதான் இத்திட்டத்தின் நோக்கமென தெரிகிறது. அதாவது, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஏற்கனவே இயங்கி வரும் சாயப்பட்டறைகளின் கழிவுகளைக் குழாய்மூலம் கொண்டு வந்து பெரியபட்டு அருகே கடலில் கலந்திட செய்வதே இதன் அடிப்படை நோக்கமாகும். ஆனால், சாயக்கழிவுகள் உரியமுறைப்படி சுத்திகரிக்கப்பட்டு  பயன்பாட்டுக்கு உகந்தநீராக வெளியேற்றப்படும் என்று சைமா அமைப்பினர் தெரிவிக்கின்றனர். எனினும், ஏற்கனவே நொய்யல், பவானி, காவிரி ஆகிய ஆறுகள் இதுபோன்ற ஆலைகளின்  சாயக்கழிவுகளால் பாழாகியுள்ளன என்பது அனைவரும் அறிந்ததே ஆகும். 

அதனால் எழுந்த பொதுமக்கள் எதிர்ப்பு, நீதிமன்றத்தின் கண்டனம் ஆகியவற்றை எதிர்கொள்ள முடியாமல் திணறிய இந்தக் கூட்டமைப்புதான், தற்போது இந்தத் திட்டத்தைக் கையிலெடுத்துள்ளது. இந்நிலையில், இதன்மூலம் நேரவிருக்கும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை உணர்ந்த  பொதுமக்கள் அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துப் போராடி வருகின்றனர். இதனை எதிர்த்து ஏற்கனவே 2015ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில்  எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தோழமைக்கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். அத்துடன், அனைத்துக் கட்சியினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மக்கள் எதிர்ப்பின் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாயக்கழிவு ஆலைகளுக்கான ஆரம்பப் பணிகளைத் தற்போது கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி மீண்டும்  தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிப்காட் பிரிவு- III வகைப்பாட்டின் கீழ் இந்த சாயக்கழிவு ஆலை அமைப்பது குறித்து பொதுமக்களிடையே நடத்தப்பட வேண்டிய  கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை. உள்ளாட்சி நிர்வாக இசைவுகளும் பெறப்படவில்லை. ஆலை அமைப்பதால் ஏற்பட உள்ள சுற்றுப்புற சூழல் மற்றும் மாசு பாதிப்பு சீர்கேடுகள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப் படவில்லை. மேலும், சிப்காட் வளாகத்தில் செயல்படும் ஆலைகள் தனிப்பட்ட முறையில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர்  02.07.2010 தேதியிட்ட சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஆணையையும் மீறி ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடற்கரை ஒழுங்காற்று சட்ட விதிகளின்படி இத்தகைய ஆழ்துளை கிணறுகள் அமைப்பதும், சாயக்கழிவுகளைக்  கடலில் கலக்கச் செய்வதும் சட்ட விரோத செயல்களேயாகும். இந்த சாயக்கழிவு ஆலை அமையுமெனில், பெரியபட்டு கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களில் நீராதாரம் நச்சாவதுடன், சுமார் 20ஆயிரம் ஏக்கர் பெருமாள்ஏரி பாசனநிலங்கள் மற்றும் பேரிடர் பாதுகாப்பு அரணாக பிச்சாவரத்தில் அமைந்துள்ள சதுப்புநில அலையாத்திக்காடுகள் ஆகியவை பாதிப்புக்குள்ளாகும்.மேலும், இந்த ஆலை அமையவுள்ள பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதி தமிழகஅரசு அறிவித்துள்ள பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியாகும். விவசாய நிலங்களின் பாதிப்பால் அதனையே நம்பி வாழ்ந்து வருகின்ற  விவசாய கூலித்தொழிலாளர்கள்  வாழ்வாதாரம் இழந்து புலம்பெயர வேண்டிய துயர நிலைக்கு ஆளாவார்கள். அத்துடன், 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் நடைபெற்றுவரும்  மீன்கள் ஏற்றுமதி  தடைபடும். அதனால் அந்நிய செலாவணி இழப்பு ஏற்படும். 

அத்துடன், ஏற்கனவே அமைந்துள்ள சிப்காட் இரசாயன ஆலைகளால் காற்று, நிலம் மற்றும் நீர் ஆகியவை மாசுபட்டு மக்களுக்குப் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் நிறுவனங்களின் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, தோல்நோய்கள், நுரையீரல் பாதிப்பு, சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான பாதிப்புகளை மேலும் அதிகரிக்கச்செய்யும் என்னும் அச்சத்தால் இந்த சாயக்கழிவு ஆலைகள் திட்டத்திற்கு மக்கள் கடும்  எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்களின் உணர்வுகளுக்கு எதிராக சைமா அமைப்பு, செய்யத்தொடங்கியுள்ள  அடிப்படை கட்டுமான பணிகளால், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை  ஏற்படலாம். எனவே, மத்திய-மாநில அரசுகள் பொது மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு சாயக்கழிவு ஆலைக்கான அனுமதியை ரத்து செய்து இத்திட்டத்தை முற்றாகக்  கைவிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!