எனக்கும் டெண்டர் முறைகேடுக்கும் எந்த தொடர்பும் இல்லை.. வழக்கை தள்ளுபடி செய்யுங்கள்.. கதறும் SP.வேலுமணி.!

By vinoth kumarFirst Published Oct 14, 2021, 10:19 AM IST
Highlights

முகாந்திரம் இல்லை என்று அரசால் கைவிட முடிவு எடுத்த வழக்கில் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடனும் உள்நோக்கத்துடனும் எனக்கு எதிராக தொடரப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றம் மற்றும் அரசியல் அழுத்தம் காரணமாக எனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்திருப்பது ஏற்புடையதல்ல.

முடிந்துபோன டெண்டர் ஒதுக்கீடு வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்க முடியாது என்று கூறி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில், சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரியும் அறப்போர் இயக்கம் சார்பிலும், திமுக சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், ஐ.பி.எஸ். அதிகாரி பொன்னி தலைமையில் குழு அமைத்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் 129 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி 1132 ஆவணங்களை ஆராய்ந்து தாக்கல் செய்த அறிக்கையில் வழக்குபதிவு செய்ய ஆரம்பகட்ட முகாந்திரம் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் அரசும் வழக்கை கைவிட முடிவு செய்திருந்தது.

இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து அவருக்குச் சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து, எஸ்.பி வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அறப்போர் இயக்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் எஸ்.பி வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். 

அதில், முகாந்திரம் இல்லை என்று அரசால் கைவிட முடிவு எடுத்த வழக்கில் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடனும் உள்நோக்கத்துடனும் எனக்கு எதிராக தொடரப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றம் மற்றும் அரசியல் அழுத்தம் காரணமாக எனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்திருப்பது ஏற்புடையதல்ல. டெண்டர் நடைமுறைகளுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வழக்கில் எந்த வகையிலும் தொடர்பில்லாத அறப்போர் இயக்கம் என்னுடைய அரசியல் விரோதிகளுக்கும் டெண்டர் கிடைக்காதவர்களுக்கும் நிழலாக இவ்வழக்கைத் தொடர்ந்துள்ளது. எனவே இந்த வழக்கு செல்லத்தக்கது அல்ல என்பதால் இதைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

அதோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையின் முதல்கட்ட அறிக்கையை எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும். மாறியுள்ள அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்தி முடிந்துபோன டெண்டர் ஒதுக்கீடு தொடர்பான விசாரணையை மீண்டும் தொடங்க முடியாது. என் அரசியல் வாழ்வுக்கும் நான் சார்ந்துள்ள கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது நான் அமைச்சராகப் பதவி வகிக்க வில்லை என்பதால் இந்த வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டிய அவசியமும் கிடையாது. எனவே அறப்போர் இயக்கம் தொடர்ந்துள்ள இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். இதனையடுத்து, இந்த வழக்கு வரும் அக்டோபர் 20ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

click me!