SP.வேலுமணி ஊழல் செய்யலைன்னு எடப்பாடி சொன்னா போதுமா? நாங்க சொல்லணும்.. சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்..!

By vinoth kumarFirst Published Jun 22, 2021, 9:23 AM IST
Highlights

கடந்த ஆட்சியின்போது பகலை இரவாக்கி, இரவை பகலாக்கி லஞ்சஒழிப்பு போலீஸார் அறிக்கை தாக்கல் செய்திருந்தால் அதை ஏற்க முடியாது. அறிக்கையை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து நீதிமன்றம் உரிய முடிவு எடுக்கும்" என கருத்து தெரிவித்து விசாரணையை ஜூலை 19-க்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

கடந்த ஆட்சியின்போது பகலை இரவாக்கி, இரவை பகலாக்கி லஞ்சஒழிப்பு போலீஸார் அறிக்கை தாக்கல் செய்திருந்தால் அதை ஏற்க முடியாது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அப்போதைய அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

அப்போது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் 220 டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் உள்ளதா என்பது குறித்து ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்திருப்பதாகவும், அதில் வேலுமணி மீது வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என முதலமைச்சர், அமைச்சரவை, தலைமை செயலாளருக்கு அறிக்கை அனுப்பியதாகவும், அதை அவர்கள் ஏற்றுகொண்டதாகவும், அதனால் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு மனுதாரர் தரப்பில் ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்தாலும் அமைச்சருக்கு நற்சான்று அளிக்கப்படவில்லை என்றும் இந்த வழக்கை நேரடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், இந்த வழக்கில் நிறைய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால் நேரடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார். மேலும், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் .

வேலுமணி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ஏற்கனவே அரசு சிறப்பு அதிகாரியை நியமித்து விசாரணை நடத்தியதில் எந்த குற்றச்சாட்டும் இல்லை எனவும், இந்த விசாரணை அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்டதாகவும் எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், புகாரை முடித்து வைத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் தாக்கல் செய்த அறிக்கைக்கு மனுதாரர்கள் தரப்பில் அப்போதே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சருக்கு எதிரான இந்த புகாரை முந்தைய அரசுதான் முடித்து வைத்தது. நீதிமன்றம் முடித்து வைக்கவில்லை.

கடந்த ஆட்சியின்போது பகலை இரவாக்கி, இரவை பகலாக்கி லஞ்சஒழிப்பு போலீஸார் அறிக்கை தாக்கல் செய்திருந்தால் அதை ஏற்க முடியாது. அறிக்கையை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து நீதிமன்றம் உரிய முடிவு எடுக்கும்" என கருத்து தெரிவித்து விசாரணையை ஜூலை 19-க்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

click me!