தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட முதலமைச்சர்…. அதிர்ச்சியில் கட்சி நிர்வாகிகள் !!

By Selvanayagam PFirst Published Oct 15, 2018, 7:11 PM IST
Highlights

தெலங்கானாவில் தன்னை எதிர்க்க யாரும் இல்லை, ஏன் ? எதிர்க்கட்சிகளே இல்லை  என்ற தைரியத்தில் ஆட்சி முடிவதற்கு 8 மாதங்களுக்கு முன்பே அஆட்சியைக் கலைத்து விட்ட முதலமைச்சர் சந்திரசேகரராவ், தற்போது காங்கிரஸ், தெலுங்கு தேசம், கம்யூனிஸ்ட்  போன்ற கட்சிகள் விஸ்வரூபம் எடுத்து வருவதால் கதி கலங்கிப் போய் உள்ளார்.

தெலங்கானா தனி மாநிலம் அமைய சந்திர சேகர ராவும் அவரது தெலங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சியும் பெரும் போராட்டம் நடத்திதான் வெற்றி அடைந்தது. இதையடுத்து நடைபெற்ற முதல் தேர்தலில் சந்திர சேகர ராவ் அமோக வெற்றி பெற்றார். தொடர்ந்து பெரிய குறை சொல்ல முடியாத அளவுக்கு அவரது ஆட்சி இருந்ததாக சொல்லப்படுகிறது.

அதனால் மீண்டும் தாங்கள் தான் வெற்றி பெறுவோம், தங்களை எதிர்க்க பெரிய கட்சிகளே இல்லை என்று மிதப்பில் இருந்தனர். இதையடுத்து, ஆட்சி முடிய இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் சட்டசபையை கலைக்க பரிந்துரை செய்தார்.

ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் தெலங்கானா மாநில அரசியலில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலுங்கானா ஜன சமீதி, கம்யூனிஸ்ம் கட்சிகள் போன்றவை கூட்டணி அமைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

சந்திரசேகர ராவ் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. நான்கு ஆண்டுகளாக முறைத்துக் கொண்டிருந்த காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் திடீர் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளன.

இதுவரை ஆர்ப்பாட்டமே இல்லாமல் இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது வீறுகொண்ட எழுந்துள்ளது. நடிகை விஜயசாந்தி தெலங்கானா மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்காக சுழன்றடித்து பிரச்சாரம் செய்து வருகிறார். புதிய கூட்டணி பிரச்சாரம், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என சந்திர சேகரராவை கதி கலங்கச் செய்துள்ளன.

அவரது கட்சி நிர்வாகிகளோ, சந்திர சேகரராவ் தேவையில்லாமல் அவசரப்பட்டு ஆட்சியைக் கலைத்து தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்டார் என புலம்புகின்றனர்.

click me!