
தெலங்கானா கோஷா எம்.எல்.ஏ. ராஜசிங் தாக்குர் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி, இப்போது செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருக்கிறார்.
ஹிந்து விராட் சமவேஷா அமைப்பு, டிசம்பர் 12 ஆம் தேதி கர்நாடக மாநிலம் யாத்கிர் மாவட்டத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசினார் ராஜசிங் தாக்குர். ஹிந்தியில் பேசிய தாக்குர், ஒவ்வொரு ஹிந்து குடும்பத்தினரும் இந்துக்களுக்கு எதிராக செயல்படுபவர்களை எதிர்ப்பதற்காக, கையில் ஒரு வாள் எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்று பேசினார்.
ஒரே ஒரு வாள் வைத்திருந்தால் எதுவும் செய்ய முடியாது. நமக்கு அதிகம் தேவை. தேவைப்படும் பட்சத்தில், நம் மதத்தைக் காக்கும் பொருட்டு, அவர்களைக் கொல்லவும் நம் மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று பேசினார் ராஜசிங் தாக்குர்.
முஸ்லிம்கள் குறித்து அவர் பேசியபோது, “நீங்கள் ஒரு குழந்தை வைத்திருந்தால், நாங்கள் ஐந்து பிள்ளைகளைக் கொண்டிருப்போம்” என்றார். மேலும் அவர் காங்கிரஸ் அரசையும் ஒரு பிடி பிடித்தார். திப்பு சுல்தான் ஜெயந்தி என திப்புவின் பிறந்த நாளைக் கொண்டாடிய காங்கிரஸ் குறித்து கடுமையாக விமர்சித்தார். திப்பு சுல்தான், பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடவில்லை. மைசூருவை ஹிந்து அரசர்களிடம் இருந்து பறித்துக் கொள்வதற்காகத்தான் போராடினார்” என்று பேசினார் ராஜசிங் தாக்குர்.
அவரின் இந்தப் பேச்சு குறித்த வீடியோ பதிவுகள், சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவின. இதை அடுத்து, இந்த விவகாரம் ஐஜிபி அலோக் குமார் கவனத்துக் கொண்டு வரப்பட்டது. இது குறித்துக் கூறிய ஐஜிபி அலோக் குமார், சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியவர் எவராயினும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அதுவும் இந்த நிகழ்ச்சியில் வாளை பயன்படுத்தியது குறித்து தெரியவந்தால், அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ராஜ்சிங் தாக்குர் 2014ல் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில், தமக்கு எதிராக 19 வழக்குகள் உள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறார். பத்மாவதி திரைப்படம் குறித்து அவர் கருத்து தெரிவித்த போது, படத்தை வெளியிட்டால், திரையரங்குகளுக்கு தீ வைப்பேன் என்று கூறியிருந்தார். மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் கொழுந்துவிட்டு எரிந்த போது, குஜராத்தில் ஹிந்துக்கள் எப்படி திருப்பித் தாக்கினார்களோ அதுபோல், வங்கத்திலும் ஹிந்துக்கள் பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.