
தொப்பி சின்னத்தை பறிக்க திட்டமிட்டே 3 சுயேட்சை வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் திமுக, அதிமுக, டிடிவி தினகரன் இடையே என பல முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட டிடிவி தினகரன் பிற்பகல் 1 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து இரட்டை இலை டிடிவிக்கு இல்லை என ஆன பிறகு தொப்பி சின்னத்தை கோருவதில் தீவிரமாக இருந்தார். ஆனால் அந்த தொப்பி சின்னத்தையும் பெற விடாமல் பல்வேறு குறுக்கீடுகள் டிடிவியை நெருக்கடிகளுக்கு உள்ளாக்கியுள்ளது.
தொப்பி சின்னம் எங்களுக்கே வழங்க வேண்டும் என கோரி டிடிவி தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தொப்பி சின்னத்தை டிடிவி தினகரனுக்கு ஒதுக்குவதில் பிரச்னை ஏதும் இல்லை எனவும் ஒன்றுக்கும் மேற்பட்டோர் தொப்பி சின்னத்தை கேட்கும்பட்சத்தில் யாருக்கு ஒதுக்குவது என ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலர் முடிவு செய்வார் எனவும் தேர்தல் ஆணையம் பதில் தெரிவித்தது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், தொப்பி சின்னத்தை பறிக்க திட்டமிட்டே 3 சுயேட்சை வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார்.