
தமிழகத்தில் கொரோனா தொற்று சற்று குறைந்துள்ள போதும் மருந்துவ நிபுணர்களின் பரிந்துரையின் படி ஜூன் 21ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாளை காலை 10 மணி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் இதோ...
டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சில்லறையாக தான் விற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மதுபான கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதி கிடையாது.
மதுபானம் வாங்க வரும் நபர்கள் நின்று வரிசையில் வருவதற்காக ஒரு அடி சுற்றளவு கொண்ட வட்டத்தினை தடுப்பு வேலிக்குள் வரைய வேண்டும். ஒவ்வொரு வட்டத்திற்கும் இடையில் 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். ஒரு நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. ஒரு நபருக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் கட்டாயம் 6 அடி சமூக இடைவெளி இருக்க வேண்டும்.
மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் திறக்கும் பொழுதும், மூடும் பொழுதும் உட்புறமும் வெளிப்புறமும் கிருமிநாசினி (user friendly disinfectant liquid) கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
டாஸ்மாக் பணியாளர்கள் கட்டாயம் மூன்றடுக்கு கொண்ட முகக்கவசம் (TRIPLE LAYER MASK), ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய கையுறை (disposable hand gloves) ஆகியவற்றினை பயன்படுத்த வேண்டும்.
குறைந்த பட்சம் இரண்டு பணியாளர்கள் மதுபான சில்லறை விற்பனைக் கடையின் வெளிப்புறம் நின்று மதுபானம் வாங்க வரும் நபர்கள் சமூக இடைவெளியுடன் வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும். மேலும் முகக்கவசம் அணிந்துள்ளனரா? என்பதனை கண்காணிக்கவும் வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.