டாஸ்மாக் கொள்ளையன் பாலாஜி! பதவி நீக்கம் செய்யுங்கள்! தஞ்சை பார் மரணத்திற்கு பதில் என்ன? கிருஷ்ணசாமி ஆவேசம்.!

By vinoth kumar  |  First Published May 22, 2023, 2:51 PM IST

அப்பாவி தொழிலாளர்கள் இரண்டு பேர் மரணமெய்தி இருக்கிறார்கள். இன்னும் காதில் பூ சுற்றுவது போல பொய்யைச் சொல்ல போகிறாயா? அல்லது மூன்று நாள் கழித்து முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து அறிக்கை விடப் போகிறாயா?


தமிழ்நாடு அரசே எத்தனை தமிழ் மக்களின் உயிரை பலிவாங்க சட்ட விரோத பார்களை மற்றும் கள்ளத்தனமாக மது விற்க அனுமதிக்க போகிறீர்கள்? என கிருஷ்ணசாமி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழகத்தில் டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்கள் மட்டுமின்றி, மது அருந்தும் கூடங்களான அனைத்து பார்களிலும் எல்லா நேரங்களிலும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுகிறது. இந்த மதுக் கூடங்களுக்கு கள்ளச் சந்தை மூலமாகவே மதுபானங்கள் வந்து சேர்கின்றன. இதனால் மூன்றாம் தர, நான்காம் தர மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

Latest Videos

ஆயத்தீர்வை கட்டாமலே இதுபோன்று மதுக் கூடங்களுக்கு கள்ளச் சந்தையில் மதுபானங்கள் கிடைப்பதால் அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்படுகிறது. தி-ஸ்டாக்கிஸ்ட் மற்றும் டாஸ்மாக் கொள்ளையன் பாலாஜி உட்பட அனைவருக்கும் கோடி கோடியாக இப்பணம் சென்றடைக்கிறது என்ற உண்மை நிலையை எடுத்துரைத்து இப்படி தான் தமிழகத்தில் ரூபாய் ஒரு லட்சம் கோடி டாஸ்மாக் ஊழல் நடைபெறுகிறது. எனவே மு.க.ஸ்டாலின், செந்தில் பாலாஜி உட்பட பலர் மீது வழக்கு தொடுக்க அனுமதிக்க வேண்டும் என்று மே 10ஆம் தேதி தமிழக ஆளுநரிடம் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. 

 

நமது குற்றச்சாட்டுகளை நிரூபிக்கக்கூடிய  வகையில் மரக்காணம் மற்றும் மதுராந்தகம் பகுதியில் விஷ மது அருந்திய 23 பேர் உயிரிழந்தார்கள்; ஒரே வாரத்தில் மீண்டும் தஞ்சையில் இன்னொரு மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது. மதியம் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை டாஸ்மாக் கடை மது ‌விற்பனை அனுமதிக்கப்படுகிறது .எனினும், இன்று தஞ்சை புதிய மீன் மார்க்கெட் அருகே உள்ள பார் ஒன்றில் காலை 10.30 மணியளவில் மது அருந்திய 65 வயது குப்புசாமி என்பவரும், 25 வயது நிரம்பிய விவேக் என்பவரும் மரணமெய்தி உள்ளனர்.

செந்தில் பாலாஜிக்கு நம்முடைய முக்கியமான கேள்விகள்:

1. மது அருந்துவதற்கும், திண்பண்டங்கள் விற்பதற்காகவும் அனுமதிக்கப்பட்ட பாரில் மது விற்கப்பட்டது எப்படி?

2. பகல் 12.00 மணிக்கு தானே டாஸ்மாக் கடை திறந்திட வேண்டும்? ஆனால், விடிய விடிய அந்த பார் திறந்து இருந்தது எப்படி?

3. அரசுக்கு எந்தவிதமான குத்தகை கட்டணமும் செலுத்தாமல் அந்த பார் இயங்க அனுமதித்தது யார்?

4. இந்த பாருக்கு வந்த மதுபானங்கள் யாரால், எங்கு உற்பத்தி செய்யப்பட்டவை?

5. அப்பாவி தொழிலாளர்கள் இரண்டு பேர் மரணமெய்தி இருக்கிறார்கள். இன்னும் காதில் பூ சுற்றுவது போல பொய்யைச் சொல்ல போகிறாயா? அல்லது மூன்று நாள் கழித்து முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து அறிக்கை விடப் போகிறாயா?

6. தமிழ்நாடு அரசே எத்தனை தமிழ் மக்களின் உயிரை பலிவாங்க சட்ட விரோத பார்களை மற்றும் கள்ளத்தனமாக மது விற்க அனுமதிக்க போகிறீர்கள்? மு.க. ஸ்டாலின் அவர்களே, மரக்காணத்திற்கு ரூ 10 லட்சம் கொடுத்தீர்கள்; தஞ்சையில் ரூ 20 லட்சம் கேட்கிறார்கள், வழங்குங்கள். இவ்வளவு சம்பவத்திற்கு பின்பும் இன்னும் இந்த பதவி தேவையா? சுயமரியாதையுடன் பதவியை விட்டு விலகுங்கள்; டாஸ்மாக் கொள்ளையன் பாலாஜியை  உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள். தமிழக மக்கள் தொடர்ந்து பொறுத்துக் கொண்டே இருக்க மாட்டார்கள்; பொங்கி எழுவார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

click me!