திமுக பெண் மாமன்ற உறுப்பினரை சமூக ரீதியாக அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த புகாரின் காரணமாக பிடிஆரின் ஆதரவாளரான முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியனை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்து நீக்கி திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது
திமுகவில் இருந்து மிசா பாண்டியன் நீக்கம்
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், திமுகவின் மதுரை மாநகர் மாவட்டத்தை சேர்ந்த மிசா பாண்டியன், கழக கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாலும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்ட காரணத்தால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக அறிவித்திருந்தார். யார் இந்த மிசா பாண்டியன் என்ற கேள்வி திமுகவினர் மத்தியில் எழுந்தது. மிசா பாண்டியன், மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்த மிசா பாண்டியன், 20 வருடங்களுக்கு முன்பு மதுரை மாநகராட்சியில் துணை மேயராக இருந்தவர். இதனையடுத்து மு க அழகிரி அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்ததால் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 2016-ல் மதுரை மத்திய தொகுதியில் வெற்றிபெற்றவுடன் அவரின் ஆதரவாளராக மாறினார்.
undefined
பிடிஆர் ஆதரவாளராக செயல்பட்ட மிசா பாண்டியன்
பி.டி.ஆர் அமைச்சரானவுடன் அவர் அலுவலகத்தில் இருப்பது, அவர் எங்கு சென்றாலும் உடன் செல்வது என பி.டி.ஆரின் முக்கிய ஆதரவாளராக செயல்பட்டார். சர்ச்சைக்கு பெயர் போன மிசா பாண்டியன் மீது திமுக நிர்வாகள் பல முறை புகார் அளித்திருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வந்தது. குறிப்பாக மதுரையில் நடைபெறும் அரசுத் திட்டப்பணிகளில் பி.டி.ஆர் பெயரைச்சொல்லி ஒப்பந்ததாரரிடம் கமிஷன் கேட்பதாகவும் புகார்களை தி.மு.க-வினரே தெரிவித்தனர். இந்தநிலையில், மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மிசா பாண்டியனின் மனைவி பாண்டிசெல்வியை, மத்திய மண்டலத் தலைவர் பதவியை அவர் மனைவிக்கு பெற்றுக் கொடுத்தார் பி.டி.ஆர். இந்தநிலையில் மதுரை மாநகராட்சி மண்டலம் மூன்றில் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி மண்டல கூட்டம் நடைபெற்றது.
கவுன்சிலரை அடிக்க பாய்ந்தாரா.?
இதில் அந்த மண்டலத்துக்குட்பட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். அப்போது மதுரை ஹாஜிமார் தெரு 54 வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் நூர்ஜஹான் கலந்து கொண்டு தனது வார்டில் உள்ள கழிவு நீர், குடிநீர் பிரச்சனை குறித்து மண்டல தலைவர் பாண்டிசெல்வியிடம் கேட்டுள்ளார். அப்போது அதிகாரிகள் முன்னிலையில் நூர்ஜஹானை மண்டல தலைவர் பாண்டி செல்வியின் கணவரும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளருமான மிசா பாண்டியன் சமூக ரீதியாக ( இஸ்லாமிய பெண்ணை) தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதன் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மதுரை காவல் ஆணையரிடம் நூர்ஜகான் புகார் அளித்தார். மேலும் திமுக தலைமைக்கும் புகார் அளித்தார்.
திமுகவில் இருந்து நீக்கி உத்தரவு
இந்த குற்றச்சாட்டை மறுத்த மிசா பாண்டியனின் மனைவி பாண்டிச்செல்வி, நூர்ஜஹான் தவறான புகார் அளிப்பதாக அவர் மீது குற்றச்சாட்டை வைத்தார். இவ்வாறு மாறி மாறி குற்றச்சாட்டு வைத்த நிலையில் நூர்ஜஹானுக்கு ஆதரவாகவும் பெண் கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்த மிசா பாண்டியன் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்க கோரி தொடர்ச்சியாக நோட்டிஸ் ஒட்டப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல்தியாகராஜனின் தீவிர ஆதரவாளரும், மத்திய மண்டலத்தலைவர் பாண்டிசெல்வியின் கணவரும் முன்னாள் துணை மேயருமான மிசா பாண்டியனை தற்காலிகமாக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்து திமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படியுங்கள்
நெல்லை மாவட்ட திமுக செயலாளர் மாற்றம்; அப்துல் வஹாப் நீக்கப்பட்டு மைதீன் கான் நியமனம்