டார்கெட் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்... ஆளுநருடன் அதிமுக தலைவர்கள் சந்திப்பின் பின்னணி.!

By Asianet TamilFirst Published Oct 20, 2021, 7:44 PM IST
Highlights

விரைவில்‌ நடைபெறவுள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சித்‌ தேர்தல்களில்‌ முறைகேடுகள்‌ நடைபெறா வண்ணம்‌ ஐனநாயக முறையில்‌ நோரமையாக தேர்தல்களை நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுநரிடம் அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது. 
 

ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து அக்கட்சி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், “சமீபத்தில்‌ நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித்‌ தேர்தலில்‌ நடைபெற்ற முறைகேடுகள்‌ தொடர்பாக ஆளுநரிடம்‌ புகார் அளித்தோம். மேலும் தேர்தல்‌ ஆணையம்‌ இத்தேர்தலில்‌ ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டது மற்றும்‌ ஆளும்‌ கட்சியைச்‌ சேர்ந்த திமுகவினர்‌ நிகழ்த்திய அராஜகப்‌ போக்கு மற்றும்‌ பல்வேறு முறைகேடுகள்‌ சம்பந்தமான விவரங்களையும்‌ உரிய ஆதாரங்களுடன்‌ பட்டியலிட்டு சம்பந்தப்பட்டவர்கள்‌ மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தோம்.
விரைவில்‌ நடைபெறவுள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சித்‌ தேர்தல்களில்‌ முறைகேடுகள்‌ நடைபெறா வண்ணம்‌ ஐனநாயக முறையில்‌ நோரமையாக தேர்தல்களை நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும்‌, அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்‌ கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதம், புகார்‌ விவரங்கள்‌ மற்றும்‌ அதற்கான ஆதாரங்களை இன்று காலை (20.10.2021 - புதன்‌கிழமை), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌, ஆளுநர்‌ மாளிகையில்‌ தமிழக ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவியிடம் வழங்கப்பட்டது.” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 நாடாளுமன்றத் தேர்தல், 2019 ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், தற்போது 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் என ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருகிறது. மீண்டும் வெற்றி பெற்று கட்சிக்கு புத்துணர்வு அளிக்க அதிமுக தலைமை முயன்று வருகிறது. குறைந்தபட்சம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலாவது வெற்றி பெற்று தங்கள் பலத்தைக் காட்ட வேண்டும் என்று அதிமுக விரும்புகிறது. அதையொட்டி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு இல்லாமல் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தவதே இன்றைய சந்திப்பின் அஜெண்டா என்று அதிமுகவில் கூறப்படுகிறது.

click me!