மதுரை தமுக்கம் மைதானத்துக்கு ஆபத்து... பாரம்பரியமிக்க மைதானத்தில் கூட்ட அரங்கு... கொதிக்கும் தங்கம் தென்னரசு!

By Asianet Tamil  |  First Published Mar 15, 2020, 6:52 PM IST

எம்.ஜி.ஆருக்கு நாடோடி மன்னன் விழா, ஜெயலலிதாவுக்கு நாட்டிய நாடகம், கருணாநிதிக்கு டெசோ மாநாடு- தமுக்கத்தில் எழுதப்பட்ட வரலாறுகள் இன்றைக்கு ‘ஸ்மார்ட் சிட்டி’ காகத் தன்னை இழக்கிறது தமுக்கம். நான்கு வழிச்சாலைகளால் மரங்கள் மறைந்து போனது... நகரமயமாக்கலினால் இப்போது மைதானமே மறையப் போகிறதாம்... 


நான்கு வழிச்சாலைகளால் மரங்கள் மறைந்து போனது... நகரமயமாக்கலினால் இப்போது தமுக்கம் மைதானமே மறையப் போகிறதாம் என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரையில் பாரம்பரியமிக்க தமுக்கம் மைதானம் நவீன கூட்ட அரங்காக மாற்றப்பட உள்ளது. இதற்கான பணிகளை மதுரை மாநகராட்சி அடுத்த மாதம் தொடங்க உள்ளது. மதுரை மாநகராட்சியின் இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில் முன்னாள் அமைச்சரும் திமுக எம்.எல்.ஏ.வுமான தங்கம் தென்னரசு, தமுக்கம் மைதானத்தில் கூட்ட அரங்கு கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
அதில், “மதுரையின் வரலாற்றோடு பின்னிப் பிணைத்துக்கொண்டப் பெருவெளி தமுக்கம். ராணி மங்கம்மாள் காலத்தில் விளையாட்டுப் போட்டிகளையும், விலங்குகளுக்கு இடையேயான சண்டைகளையும் கண்டு களிக்கும் வகையில் உப்பரிகையுடனும், வளைவுத் தூண்கள் தாங்கி நிற்கும் விதானத்துடனும் அமைக்கப்பட்ட ஒரு மாளிகையினை ஒட்டி அதன் பொருளை உணர்த்தும் தெலுங்குச் சொல்லான ‘தமுகமு’ என்ற பெயரில் உருவாகி பின்னர் தமுக்கம் என்றானதாகக் கருதுகிறார்கள். 1764-ல் ஆங்கிலேயத் தளபதி மேஜர் காம்ப்பெல் மதுரைக் கோட்டையை முற்றுகை இட்டபோது அன்றைய தமுக்கத்தின் ஒருபகுதியில் படைப்பிரிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
காலந்தோறும் காட்சிகள் மாறினாலும் அதன் மெளன சாட்சியாக மாறாமல் இன்றுவரை நின்ற தமுக்கம் மைதானத்தோடு மதுரை வாசிகளின் உறவு அலாதியானது. தனிப்பட்ட வகையில், 1975-ம் ஆண்டு தமுக்கத்தில் நடைபெற்ற திமுக மகளிர் மாநாட்டிற்கு அம்மாவோடு போன நினைவும், கருணாநிதி முதல்வராக அதில் பங்கேற்ற நிகழ்வும் இன்னமும் நினைவில் இருக்கிறது. அதன் பின் எத்தனையோ நிகழ்ச்சிகள்...எண்ணற்ற நினைவுகள்.

எம்.ஜி.ஆருக்கு நாடோடி மன்னன் விழா, ஜெயலலிதாவுக்கு நாட்டிய நாடகம், கருணாநிதிக்கு டெசோ மாநாடு- தமுக்கத்தில் எழுதப்பட்ட வரலாறுகள் இன்றைக்கு ‘ஸ்மார்ட் சிட்டி’ காகத் தன்னை இழக்கிறது தமுக்கம். நான்கு வழிச்சாலைகளால் மரங்கள் மறைந்து போனது... நகரமயமாக்கலினால் இப்போது மைதானமே மறையப் போகிறதாம்... மதுரையின் பாரம்பரிய அடையாளம் - சுவாசப் பெருவெளி- தமுக்கம் அழிந்துவிடாமல் காக்கும் கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது” என்று தங்கம்  தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

click me!