ஊழலை சகித்துக்கொள்ளாத மோடி அதிமுக ஆட்சியை எப்படி சகித்துக்கொள்கிறார்..? தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி தேவை... தமிழருவி மணியன் பொளேர்!

By Asianet TamilFirst Published Nov 25, 2019, 7:19 AM IST
Highlights

தற்போது தமிழகத்தில் உள்ள ஆட்சியை கலைத்துவிட்டு 6 மாதங்களுக்கு ஆளுநர் ஆட்சியின் மூலம் பாஜக மக்களுக்கு தேவையான நல்ல விஷயங்களை செய்ய வேண்டும். அடுத்து தேர்தல் வந்தால், அதிமுகவினரும் திமுகவினரும் பணத்தைச் செலவு செய்ய மாட்டார்கள். அதன் பிறகு தமிழகத்தில் தார்மீக தகுதியோடு பாஜக தேர்தலைச் சந்திக்கலாம். 

ஊழலை சகித்துக் கொள்ள மாட்டேன் என மேடைதோறும் பேசும் பிரதமர்  நரேந்திர மோடி, தமிழகத்தில் நடக்கும் மோசமான ஆட்சியை எப்படி சகித்துக் கொள்கிறார் எனத் தெரியவில்லை என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். 
 ‘துக்ளக்’ இதழின் பொன்விழா ஆண்டின் சிறப்புக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் பங்கேற்று பேசினார். “தமிழை வளர்த்தோம் என்று திமுகவினர் பேசுவார்கள். ஆனால், திமுகவினர்தான் தமிழால் வளர்ந்தார்களே தவிர, தமிழை அவர்கள் வளர்க்கவே இல்லை. தமிழக தேர்தல் களத்தை சாதி, மதம், பணம் ஆகிய அசுர சக்திகள்தான் தீர்மானித்துவருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மேடையில் பேசும்போதும் ஊழலை சகித்துக் கொள்ள மாட்டேன் எனப் பேசுகிறார். ஆனால்,  தமிழகத்தில் நடக்கும் மோசமான ஆட்சியை எப்படி அவர் சகித்துக் கொள்கிறார் என்றே தெரியவில்லை. இந்த ஆட்சியைத் திமுகவாலும் தொட முடியவில்லை. ஊழல் நாயகர்களாக விளங்கும் திமுக, எதிர்கட்சியாக இருப்பதால்தான், அதிமுக ஆட்சியை அசைக்க முடியவில்லை. உண்மையில் ஜனநாயகத்தை மதிக்கும் சுத்தமான எதிர்க்கட்சி இருந்திருந்தால், எடப்பாடி பழனிசாமி ஆட்சி 10 நாள்கூட நீடித்திருக்காது.


தற்போது தமிழகத்தில் உள்ள ஆட்சியை கலைத்துவிட்டு 6 மாதங்களுக்கு ஆளுநர் ஆட்சியின் மூலம் பாஜக மக்களுக்கு தேவையான நல்ல விஷயங்களை செய்ய வேண்டும். அடுத்து தேர்தல் வந்தால், அதிமுகவினரும் திமுகவினரும் பணத்தைச் செலவு செய்ய மாட்டார்கள். அதன் பிறகு தமிழகத்தில் தார்மீக தகுதியோடு பாஜக தேர்தலைச் சந்திக்கலாம். பாஜக தமிழகத்தில் வளர வேண்டும் என்றால், தார்மீக சக்தியைக் கொண்டு செயல்பட வேண்டும்.” என்று தமிழருவி மணியன் பேசினார்.

click me!