“ராமதாஸ் வன்னியர் நலனுக்காக அதை செய்யவில்லை”... 10.5% உள் ஒதுக்கீடு குறித்து சர்ச்சையை கிளப்பும் வேல்முருகன்!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 6, 2021, 1:35 PM IST
Highlights

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், பாமக நிறுவனர் ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில், தற்காலிக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட தற்காலிக சட்ட மசோதாவின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கத் தடை கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தலுக்காக மட்டுமே வன்னியர் உள் ஒதுக்கீடு மசோதா கையில் எடுக்கப்பட்டுள்ளதாக பலரும் குற்றச்சாட்டி வரும் நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், பாமக நிறுவனர் ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது பாமக நிறுவனர் ராமதாஸிடம் வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் ராமமூர்த்தி தொடந்த வழக்கின் அடிப்படையில் தான் வன்னியர் உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது என கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த ராமதாஸ் ராமமூர்த்தியை நாய் என ஒருமையில் திட்டியது கண்டிக்கத்தக்கது என்றும், இப்படி நாகரீகமற்ற முறையில் பேச தன் கட்சியினருக்கு ராமதாஸ் கற்றுக்கொடுக்கிறாரா? என்றும் வேல்முருகன் கேள்வி எழுப்பினர். நான் தான் வன்னிய மக்களின் குத்தைதாரர் என்பது போல் இனி செயல்பட முடியாது என்பதால் ராமதாஸ் தரக்குறைவாக பேச ஆரம்பித்துவிட்டார் என்றும் தெரிவித்தார். 

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட தற்காலிக சட்ட மசோதா என்பது ராமதாஸும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் அரசியலுக்காக திட்டமிட்டு போட்ட பொய் ஒப்பந்தம் என குற்றச்சாட்டினார். மத்திய அரசு பதவிகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள், வங்கி பணியிடங்களுக்கு 8 ஆயிரம் வடமாநிலத்தவர்களுக்கு ஆணை வழங்கப்பட்டது. இதை எல்லாம் ராமதாஸ் என்றாவது கேட்டிருக்கிறாரா? என்றும் அடுக்கடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். 

click me!