
கடந்த 2010ம் ஆண்டில் சிவா நடிப்பில் வெளியான படம் தமிழ்ப்படம். தமிழ் திரைப்படங்களில் பின்பற்றும் ஃபார்முலாக்களையும் பல படங்களின் சீன்களையும் கிண்டலடித்ததோடு பல நடிகர்களையும் தமிழ்ப்படத்தில் கிண்டலடித்திருந்தார் இயக்குநர் சி.எஸ்.அமுதன்.
அதுவரையிலான தமிழ் திரைப்படங்களிலிருந்து சற்று வித்தியாசமாக மேற்கொள்ளப்பட்ட அமுதனின் அந்த முயற்சி வெற்றியைத் தந்தது. சினிமா ரசிகர்கள் அந்த படத்தை வெகுவாக ரசித்தனர்.
யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டலடித்திருந்த தமிழ்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. அதற்கான அறிவிப்பு வெளியாகும்போதே, ரஜினி - ஷங்கர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் எந்திரன் ”2.0” படத்தின் தலைப்பை’தமிழ்படம்’ இரண்டாம் பாகத்தில் சேர்த்து தமிழ்படம் ”2.0” என போட்டு தனது வேலையை தொடங்கிவிட்டார் இயக்குநர் அமுதன்.
அத்துடன் நிறுத்தாமல், படத்தின் முதல் போஸ்டரில், 25.05.2018 அன்று படம் ரிலீசாகும் என்றும் அதற்கு அடுத்த நாளே (26.05.2018) தமிழ் ராக்கர்ஸில் படம் வெளியாகும் என்றும் குறிப்பிட்டு மிரட்டியுள்ளனர் படக்குழு. மேலும் ’Official Piracy Partner - தமிழ் ராக்கர்ஸ்’ என்றும் குறிப்பிட்டு, திரையுலகையே மிரட்டும் தமிழ் ராக்கர்ஸையே மிரட்டியுள்ளது படக்குழு.
அத்துடன் இல்லாமல், முழுக்கை வெள்ளை சட்டையை முழங்கைக்கு மேலே மடித்து விட்டு, நெற்றியில் திருநீறு, குங்குமத்துடன் சிவா கண்களை மூடி தியானம் செய்வது அமர்ந்துள்ளார். இந்த போட்டோ, தர்மயுத்தம் தொடங்கியபோது தியானம் இருந்த பன்னீர்செல்வத்தை நினைவுபடுத்துகிறது. எனவே பன்னீர்செல்வத்தையும் அவர் நடத்திய தர்மயுத்தத்தையும் தமிழக அரசியலையும் சாடும் வகையிலும் இந்த படத்தில் காட்சிகள் அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது.