
ஆர்.கே.நகரில் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் தலைவர் யார் என்ற கேள்விக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதலிடத்தை வழங்கியுள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியாக இருந்த ஆர்.கே.நகரில், இம்மாதம் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து, திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட வேட்பாளர்கள் இத்தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். நடிகர் விஷால் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
வேட்புமனுவில் சொத்து மதிப்பு உள்ளிட்டவைகள் முறையாக குறிப்பிடவில்லை என்று நடிகர் விஷாலின் மனுவையும், ஜெ.தீபா வேட்புமனுவில் சிலவற்றை பூர்த்தி செய்யப்படாமல் விட்டுள்ளதாலும் அவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இந்த நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் இறங்கின. டிடிவி தினகரனுக்கு பிரஸர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது அவரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் தலைவர்கள் குறித்து எடுக்கப்பட்ட ஆய்வு முடிவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பார் என்று 39.9 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கு அடுத்ததாக டிடிவி தினகரன், நடிகர் கமல்ஹாசன், சீமான், அன்புமணி உள்ளிட்டோருக்கு மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது.
ஆர்.கே.நகரில் மருத்துவ வசதி, சாலை வசதி இல்லை, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. குடிநீரில் கழிவுநீர் கலப்பதை, மீன்பிடி துறைமுகம் மோசமான நிலையில் உள்ளது உள்ளிட்ட பிரச்சனைகளையும் ஆர்.கே.நகர் மக்கள் எதிர்கொள்கின்றனர்.
இந்த பிரச்சனைகளை தீர்க்கும் தலைவர் யார் என்று கருத்து கணிப்பு ஆர்.கே.நகர் தொகுதி மக்களிடம் நடத்தப்பட்டது. மேலும், தற்போது நடைபெறும் தேர்தலில் எந்த கட்சி, பிரச்சனைகளைத் தீர்க்கும் கட்சி என்றும் மக்களிடம் கேட்கப்பட்டது. அதில், திமுகவுக்கு 39.9 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளனர். அடுத்ததாக டிடிவி தினகரனுக்கு 30.15 சதவிகித வாக்குகளும், முதலமைச்சர் - துணை முதலமைச்சர் ஆகியோர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
விரைவில் கட்சி தொடங்க உள்ளதாக கூறிவரும் நடிகர் கமல் ஹாசன் மீதும் ஆர்.கே.நகர் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த வரிசையில் கமலுக்கு மூன்றாவது இடத்தை ஆர்.கே.நகர் மக்கள் கொடுத்துள்ளனர். 4-வது இடத்தை சீமானும், 5-வது இடத்தை அன்புமணியும் பெற்றுள்ளனர்.