
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு கடந்த ஓராண்டாக காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தவிர தினகரன் உள்ளிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 59 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. திமுக, அதிமுக, தினகரன் என ஒவ்வொரு தரப்பும் தங்களின் வலிமையை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், இதுவரை இல்லாத அளவிற்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இரட்டை இலையை இழந்து கட்சி தங்களுக்கு இல்லை என்ற நிலையில், தனித்துவிடப்பட்ட தினகரன், கட்சியை கைப்பற்ற ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் தீயாய் வேலை செய்துவருகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மக்களும் அதிமுக தொண்டர்களும் தற்போதைய அதிமுக அரசுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க துடிக்கிறார் தினகரன்.
அதேபோல், இரட்டை இலையை மீட்ட சந்தோஷத்தில் தேர்தலை எதிர்கொள்ளும் அதிமுகவும், மக்களும் தொண்டர்களும் தங்கள் பக்கமே இருக்கிறார்கள் என்பதையும் மக்கள் மத்தியில் அதிமுக அரசுக்கு நற்பெயரும் வரவேற்பும் இருக்கிறது என்பதை நிரூபிக்க போராடுகின்றனர்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அற்புதமான வாய்ப்புகள் கிடைத்தும் ஆட்சியைக் கலைத்துவிட்டு திமுகவால் ஆட்சிக் கட்டிலில் அமரமுடியவில்லை என்ற குரல் ஆங்காங்கே எழுந்தது. அதிமுகவின் உட்கட்சி பிரச்னையை பயன்படுத்தி ஆட்சிக்கு வர விரும்பவில்லை. மக்களிடத்தில் அதிமுக அரசின் நிர்வாக தோல்வியை எடுத்துரைத்து ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் திமுக உள்ளது. அதனடிப்படையில், அதிமுக அரசின் தவறுகளை மக்களிடத்தில் விளக்கி ஆளும் கட்சியை இடைத்தேர்தலில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற முனைப்பில் திமுக உள்ளது.
திமுக, அதிமுக, தினகரன் ஆகியோரால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பரபரப்பு அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் பரபரப்பை ஏற்படுத்தினார் விஷால். திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். ஆனால், முன்மொழிந்ததாக கூறப்பட்டவர்கள், மறுப்பு தெரிவித்ததால் அவரது மனுவை நிராகரித்ததாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். தன்னை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதாக ஆடியோ ஒன்றை விஷால் வெளியிட்டார். எனினும் விஷாலின் வேட்புமனுவை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
ஜனநாயகம் சிதைக்கப்பட்டு தனது மனு நிராகரிக்கப்பட்டதாக விஷால் பொங்கினார். விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு திமுக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.
விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு, பிரசாரங்களுக்கு அனுமதி வழங்குவதில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமி மீது முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமி மாற்றப்பட்டு பிரவீன் நாயர் நியமிக்கப்பட்டார்.
இந்த பிரச்னைகளுக்கு நடுவே, பணப்பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவரும் போதிலும், ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா படு ஜோராக நடந்துவருவதாகக் கூறி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் புதுவண்ணாரப்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகருக்கு நடக்க இருந்த இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாகத்தான் ரத்து செய்யப்பட்டது. எனவே இந்தமுறை பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆனாலும் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கிடையே, இந்தமுறையும் பணப்பட்டுவாடாவைத் தடுக்க முடியாததால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது என்ற அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழிசையின் சாலை மறியலும் அதற்கான சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது. இதற்கிடையே திவாகரனின் மகன் ஜெயானந்தும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மீண்டும் ரத்தாகும் என ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு, பாஜகவின் பணப்பட்டுவாடா புகார், தமிழிசையின் சாலை மறியல் ஆகிய தேர்தலை மையமாக வைத்த பிரச்னைகளையும் பாஜக பிரமுகரான எஸ்.வி.சேகரின் டுவீட்டையும் வைத்து பார்க்கையில் இந்தமுறையும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தாகுமோ என்ற கேள்வி எழத் தொடங்கியுள்ளது.