
தினகரனின் இடைத்தேர்தல் வெற்றிக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று முதன் முதலாக கூடியிருக்கிறது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் வர அனுமதிக்கப்படாத நிலையில், சிங்கிள் சிங்கமாக தினகரன் இன்று சபைக்குள் உட்கார்ந்திருக்கிறார்.
இந்நிலையில் வழக்கம்போல் சபைக்குள் போன சில நிமிடங்களிலேயே எதிர்ப்பு கூச்சல் போட்டுவிட்டு வெளியே வந்துவிட்டது ஸ்டாலின் அண்ட்கோ. அவர்களின் வாலை பிடித்தபடி காங்கிரஸ் கோஷ்டியும் வெளியேறிவிட்டது. இதில் சர்ப்பரைஸிங்காக அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரும் வெளியேறினார். அது தமீமுன் அன்சாரியே!
கடந்த பொதுத் தேர்தலில் ஜெயலலிதாவின் கூட்டணியில் இடம் கிடைத்து, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்கள் தனியரசு, அன்சாரி மற்றும் கருணாஸ் மூவரும்தான்.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் அ.தி.மு.க. அணி தன் பெரும்பான்மையை நிரூபிக்க முயலும்போதெல்லாம் இந்த 3 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை நாடுவது வாடிக்கை. இதில் கருணாஸ் எப்பவுமே சசிகலாவின் ஆதரவாளர் என்பதை வெளிப்படையாக குறிப்பிட்டு தன் நிலைப்பாட்டை எடுப்பார். தனியரசுவோ தனக்கும், தன் நன்மைக்கும் எந்த பிரச்னையும் வரக்கூடாது என்பதில் குறியாக இருப்பார். அதனால் அப்போது முதல்வர் பதவியில் யார் இருக்கிறாரோ அவரை கூல் செய்யும் வகையில் நடந்து கொள்வார். அன்சாரி மட்டும் அவ்வப்போது இருக்கும் சூழ்நிலை மற்றும் பொது நலனுக்கு ஏற்ப முடிவெடுப்பார்.
இந்நிலையில் இன்று அவையிலிருந்து வெளிநடப்பு செய்த அன்சாரி, அதற்கான காரணமாக கவர்னரை சுட்டிக் காட்டியிருக்கிறார். அதாவது தமிழகத்தை ஆளும் அரசை தேர்ந்தெடுத்தது மக்கள்தான். ஆனால் அப்படி உருவான மக்களரசை புறந்தள்ளிவிட்டு கவர்னர் கள ஆய்வு, அதிகாரிகளுடன் ஆலோசனை என்று அதிகாரத்தை கையிலெடுக்கிறார் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். மாநில சுயாட்சி தத்துவத்தை அவமதிக்கும் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வெளிநடப்பை தான் செய்வதாக கூறியிருக்கிறார்.
ஆனால் இதை விமர்சிக்கும் அரசியல் பார்வையாளர்கள் “அன்சாரி சொல்வது போல் மக்களுக்கு ஒன்றும் கவர்னர் மீது எந்த வருத்தமுமில்லை. சொல்லப்போனால் செய்லபடாமல் அரசு கிடக்கும் நிலையில், செயல்படும் கவர்னரை அவர்கள் போற்றத்தான் செய்கிறார்கள்.
ஆக அன்சாரி ஏதோ ஒரு அரசியல் நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டார். தன் வெளிநடப்பின் மூலம் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு தன் ஆதரவை வெளிப்படுத்த நினைக்கிறார். யாரையோ சந்தோஷப்படுத்துவதற்காக இதை செய்துவிட்டு, கவர்னர் மீது வீண் பழி போட்டு காயப்படுத்தியிருக்கிறார்.” என்கிறார்கள்.