மிக விரைவில் கஞ்சா இல்லா தமிழகம்... உறுதி அளித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

By Narendran SFirst Published May 31, 2022, 4:25 PM IST
Highlights

விரைவில் கஞ்சா இல்லா தமிழகம் உருவாக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

விரைவில் கஞ்சா இல்லா தமிழகம் உருவாக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற உலக புகையிலை ஒழிப்பு தின நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 9.3 சதவீதம் பெண்களும், 31 சதவீதம் ஆண்களும் தமிழகத்தில் புகையிலையை பயன்படுத்தி வருகின்றனர். 13 ஆயிரத்து 80 பள்ளிகளில் தொடர் புகையிலை ஒழிப்பு கண்காணிக்கப்படுகிறது. ஆயிரத்து 344 கல்லூரிகள் புகையிலை இல்லா நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்திற்கு பயந்து மட்டுமல்லாமல், மனசாட்சிக்கு பயந்து போதைப் பொருட்களை விற்பனை செய்வதை விற்பனையாளர்கள் நிறுத்த வேண்டும்.

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக 3 ஆயிரத்து 500 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டு 21 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கண்காணிக்கப்பட்டு, கஞ்சா இல்லா தமிழகம் விரைவில் உருவாக்கப்படும். பான்பராக், குட்கா விற்க கர்நாடகாவில் தடை இல்லை என்பதால் பெங்களூருவில் இருந்து காய்கறி வண்டியில் குட்கா போன்ற போதைப் பொருட்கள் தமிழகத்திற்கு கடத்தப்படுகிறது. குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

இதனிடையே நேற்று 10 மாவட்டங்களில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 494 வழக்குகளில் 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. விருதுநகர் 76 கஞ்சா வழக்கில் 119 வங்கி கணக்குகளும், திண்டுக்கல்லில் 77 கஞ்சா வழக்கில் 116 வங்கி கணக்குகளும், தேனியில் 81 கஞ்சா வழக்குகளில் 146 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. இதேபோல் ராமநாதபுரத்தில் 28 வழக்குகளில் 56 வங்கி கணக்குகளும், சிவகங்கையில் 12 வழக்குகளில் 16 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது. நெல்லையில் 14 வழக்குகளில் 22 வங்கி கணக்குகளும், தென்காசியில் 11 வழக்குகளில் 20 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடியில் 22 வழக்குகளில் 36 வங்கி கணக்குகளும், குமரியில் 59 வழக்குகளில் 91 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!