நாட்டில் அமைதி நிலவ, தமிழக மக்கள் நலமுடன் இருக்க ஏழுமலையானை தரிசிக்க நடை பயணம் வந்தேன்... அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

First Published May 26, 2018, 3:55 PM IST
Highlights
Tamilnadu to stay with the pilgrims to come to the temple Uthayakumar


தமிழகத்தில் அமைதி நிலவவும், வளர்ச்சி பெறவும் தமிழக மக்கள் நலமுடனும் இருக்க வேண்டுமென நடை பயணமாக ஏழுமலையானை தரிசிக்க வந்தேன் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அமைச்சர் உதயகுமார் தனது குடும்பத்தினருடன் மலைப்பாதை வழியாக திருமலைக்கு நடந்து சென்றார். அப்போது தேவஸ்தான அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.

திருப்பதியில் இன்று காலை சாமி தரிசனம் செய்த பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்ற பிறகு 23000 போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் நடைபெற்றதாக எடுத்துரைத்தார்.

பொது மக்கள் நடத்தும் அறவழியிலான போராட்டங்களுக்கு உரிய தீர்வு காணப்படுவதுடன் அவர்களது கோரிக்கைகளையும் அரசு நிச்சயம் பரிசீலனை செய்யும் என்று கூறினார்.

புதிய தொழிற்சாலைகள் வருவதற்கு முதலில் சட்டம் ஒழுங்கு, தண்ணீர், தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் அவை அனைத்தையும் அரசு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். மக்களின் போராட்ட வடிவம் மாறும் போது அம்மா அரசு அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் சில தீய சக்திகள் பதிவிடும் தவறான கருத்துக்களே  மக்களை இப்படி போராட தூண்டிவிடுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பேசிய அவர், ' தமிழகத்தில் அமைதி நிலவவும், தமிழக மக்கள் நலமுடனும் இருக்க வேண்டுமென நடை பயணமாக ஏழுமலையானை தரிசிக்க வந்தேன்.  தூத்துக்குடியில் அமைதி திரும்பி வருகிறது. பஸ்கள் இயக்கப்படுகின்றன. வியாபாரிகளும் பொது மக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர் என இவ்வாறு அவர் கூறினார்.

click me!