ஒரே அறிவிப்பில் பெற்றோர், மாணவர்களை குளிர வைத்த எடப்பாடியார்..!! மனமார வாழ்த்தும் ஆசிரியர்கள்..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 9, 2020, 1:44 PM IST
Highlights

பொதுத்தேர்வு ரத்து மற்றும் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு  மாணவர்கள்-பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்கியுள்ளது. 

10 ஆம் வகுப்பு தேர்வினை ரத்துசெய்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 10 ஆம் வகுப்பு  பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27 ந்தேதி தொடங்க இருந்தநிலையில் கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது வரை தேர்வு நடக்குமா நடக்காதா என மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் குழப்பம் நீடித்துவந்தது. நாளுக்குநாள் கொரோனா தொற்று விஸ்வரூபமெடுத்துவருவதினால் தமிழத்தில் 10 ஆம் வகுப்பு  பொதுத்தேர்வு  எப்படி நடைபெறும் என்ற அச்சம் நீடித்து வந்தது. 

இதுவரை தமிழகத்தில் 33 ஆயிரத்தைத் தாண்டி கொரோனா தொற்று பரவியுள்ளது. ஆதலால் ஜுன் 15 ல் பொதுத்தேர்வு என்ற அறிவிப்பு பொதுவாகவே அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. தமிழ்நாடு அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுவந்தாலும், தொற்று பரவுவதிலிருந்து குறைக்க முடியுமே தவிர தடுப்பது இயலாது, எனவே பொதுத்தேர்வினை ரத்துசெய்ய வேண்டும் என தொடக்கத்திலிருந்து  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்  சார்பில் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தோம். அதனை தொடர்ந்து எதிர்கட்சித்தலைவர், பா.ம.க. மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர் அமைப்புகள் ,பெற்றோர்கள் தொடரந்து வலியுறுத்தி வந்ததன் அடிப்படையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்துசெய்ததோடு, விடுபட்ட 11 ஆம் வகுப்பு தேர்வினையும் முழுமையாக ரத்து செய்த மாண்புமிகு.முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். 

மேலும், ஊரடங்கு  உத்தரவால் மாணவர்களும், பெற்றோர்களும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து  மன உளைச்சலில் இருந்ததால் பொதுத்தேர்வு ரத்து மற்றும் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு  மாணவர்கள்-பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்கியுள்ளது. மாணவர்களின் நலன்கருதி 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சியளித்த  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், எதிர்கட்சித்தலைவர், பாமக, மதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், ஆசிரியர், பெற்றோர் அமைப்புகளுக்கும், செய்திகளை உடனுக்குடன் அரசுக்கு எடுத்துசென்ற ஊடகம், பத்திரிகைகளுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

click me!