தனிமைப்படுத்தப்பட்டவர்களும் மனிதர்களே..!! சுகாதார துறையினருக்கு ஒர் வேண்டுகோள்..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 20, 2020, 7:09 PM IST
Highlights

சேலத்தில் உள்ள ஒரு தனிமை முகாமில் கொரோனா நோயாளிகளுக்கான உணவு வாசலில் குவிக்கப்பட்டு கிடப்பதையும், தேவைப்படும் போது அந்த நோயாளிகள் அதை எடுத்து உண்ணும் அவலம் குறித்தும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தனிமைப்படுத்துபவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- கொரோனா  பேரிடரில் அர்பணிப்புடன் மருத்துவர்களும் சுகாதாரத்துறையினரும் செயல்பட்டு வருகின்றனர் அவர்களின் செயல் பாடுகள் போற்றுதலுக்கு உரியது ஆனால் இதில் சிலர் மனியநேயமற்று நடந்து கொள்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து தாயகம் வருபவர்களையும், வெளி மாவட்டங்களில் இருந்து இ-பாஸ் எடுத்து வருபவர்களையும் அரசு தனிமை முகாம்களில் வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறையின் சார்பில் செய்திகள் வெளியாகி வருகின்றது. ஆனால் உண்மையில் தனிமை முகாம்களில் தனிமைப் படுத்தப்படுவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்? என்பதை சமீபத்திய சில சம்பவங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன.தனிமைப் படுத்தப்பட்டவர்கள் சரியான நடத்தப்படுகின்றார்களா? அல்லது அவர்களை சிறைக் கைதிகளைப் போல நடத்துகின்றார்களா? என்ற கேள்வி தொடர்ச்சியாக எழுந்து கொண்டிருக்கின்றது. தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்கு சத்தான உணவுகளை வழங்குவதாக சுகாதாரத்துறை சொல்கின்றது.

ஆனால் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் முறை, உணவுகளின் தரம் குறித்து சமூக வலைத்தளங்களில் செய்தி மற்றும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனிமை முகாம்களின் வாசலில் உணவுப் பொட்டலங்களை சுகாதாரத்துறை ஊழியர்கள் குப்பைகளைப் போல  கொட்டி விட்டுச் செல்கின்றார்கள். தனிமைப் படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு பசிக்கும் போது அவர்கள் அங்கே வந்து அந்த உணவுகளை எடுத்து சாப்பிடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.தனிமை முகாம்களில் சிகிச்சை பெற்று வருபவர்களை கொரோனா நோயாளிகளைப் போல ஊழியர்கள் நடத்தி வருகின்றார்கள். தனிமை முகாம்களில் இருப்பவர்களை ஊழியர்கள்  தீண்டத்தகாதவர்களைப் போல நடத்துவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.  அவர்களுக்கு முறையான உணவுகளும், மருத்துவ வசதிகளும் வழங்கப்படவில்லை என்பதை பல்வேறு சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன.சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கத்தில் கூத்தாநூல்லூரைச் சேர்ந்த முகமது ஷரிப்  என்ற முதியவர், மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனிமை முகாமில் அடைக்கப்பட்ட முதியவர் முகமது ஷரீப்,  கொரோனா வைரஸால் உயிரிழக்கவில்லை! மாறாக அவர் மேற்கொள்ளும் வழக்கமான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்காமலேயே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிட வேண்டிய விடயம்.

சேலத்தில் உள்ள ஒரு தனிமை முகாமில் கொரோனா நோயாளிகளுக்கான உணவு வாசலில் குவிக்கப்பட்டு கிடப்பதையும், தேவைப்படும் போது அந்த நோயாளிகள் அதை எடுத்து உண்ணும் அவலம் குறித்தும் செய்திகள் வெளியாகியுள்ளன.கொரோனா தொற்று உள்ளவர்கள் அல்லது தனிமைப் படுத்தப்பட்டவர்களை  முதலில் மனரீதியாக பலப்படுத்துவதே அவருக்கு வழங்கப்படும் முதல் நிவாரணம் ஆகும். சமீபத்தில் புதுக்கோட்டை தனிமை முகாமில் கொரோனா தொற்று நோயாளி மனரீதியாக பலமிழந்து தற்கொலை செய்து கொண்டார். ஆக இது போன்ற மனரீதியான தூண்டல்கள்  கொரோனா நோயாளிகளுக்கு ஏற்படுவதால்தான் அவர்கள் தற்கொலை முடிவை எடுக்கின்றார்கள்.கொரோனா நோயாளிகள் மற்றும் தனிமைப் படுத்தப்படுகின்றவர்களுக்கு  முதலில் மனரீதியான பலத்தையும் பிறகு சத்தான உணவுகளையும் வழங்க வேண்டும். அதை விடுத்து அவர்களை  குற்றவாளிகளைப் போலவும், தீண்டத்தகாதவர்களைப் போலவும் நடத்துவது கண்டனத்திற்குரியதாகும். தமிழக அரசும், சுகாதாரத் துறையும் இதுபோன்ற சம்பவங்களை கண்டறிந்து  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

முகாம்களில் தனிமைப் படுத்தப்படுவர்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவது மனித உரிமை மீறலாகவே பார்க்கப்படுகின்றது. இதுபோன்ற இரக்கமற்ற சம்பவங்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.கொரோனா நோயாளிகளும், தனிமைப்படுத்தப்பட்ட மக்களும்  சாமானிய மனிதர்கள் என்பதையும், அவர்களின் நோய் குணமாகக்கூடிய நோய் என்பதையும் அவர்களுக்கு உணர்த்தும் வகையில் நடந்து கொண்டு அவர்களை உரிய மரியாதையுடனும் மனிதாபிமானத்துடனும் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள் விடுக்கின்றது.
 

click me!