#BREAKING:சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய மாசுகட்டுபாட்டு வாரிய முன்னாள் தலைவர்..தூக்கிட்டு தற்கொலை..

By Thanalakshmi VFirst Published Dec 2, 2021, 7:44 PM IST
Highlights

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் விசாரிக்கப்பட்டு வந்த, முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவரான வெங்கடாசலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

சென்னை வேளச்சேரியில் உள்ள தலைமை செயலக காலனியில் உள்ள வீட்டில், முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கடந்த செப்டம்பர் மாதம், இவர் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப் பதிவு செய்து சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டிலிருந்து 8 கிலோ தங்கம், 10 கிலோ சந்தனப் பொருட்கள், ரூ.13.5 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டிருந்தன. தொடர்ந்து, இவரது சொகுசு பங்களா, அலுவலகம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதையடுத்து, வெங்கடாசலம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார், சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

சேலம் மாவட்டம், ஆத்துார் அம்மம்பாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம், இவருக்கு வயது 63. 1983ல் ஐ.எப்.எஸ்., அதிகாரியாக தேர்ச்சி பெற்று, வனத்துறையில் சென்னை உட்பட பல இடங்களில் பணிபுரிந்துள்ளார். சுற்றுச்சூழல் இயக்குனராக பணிபுரிந்து, 2018ல் ஓய்வு பெற்றார். அதனையடுத்து, முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், 2019ல், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். இவர், தனது அதிகாரத்தை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

மேலும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் வெங்கடாச்சலம் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் கூறப்பட்டது. மேலும் வனத்துறை பணியில் இருந்து ஓய்வு பெற்று பிறகு, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஆனவுடன் இவர் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தலுக்கு முன்பு 60 தொழில் நிறுவனங்களுக்கு அவசர, அவசரமாக தடை இல்லா சான்று வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியை பயன்படுத்திக்கொண்டு இவர் பல்வேறு நிறுவனங்களின், திட்டங்களுக்கு முறைகேடாக, தனது தொண்டு நிறுவன பெயரில் லஞ்சம் பெற்றுக்கொண்டு, அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். உடனடியாக சென்னை கிண்டி, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் உள்ள வெங்கடாச்சலத்தின் அலுவலகம், சென்னை வேளச்சேரி, புதிய தலைமைச் செயலக காலனியில் உள்ள அவரது வீடு மற்றும் சேலம் அம்மம்பாளையத்தில் உள்ள அவரது வீடு மற்றும் உறவினர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைகளில் ஈடுபட்டனர். ஓய்வு பெற இருந்த நிலையில் வெங்கடாச்சலம், ஊழல் வழக்கில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. உயிரியல் பிரிவில் எம்.எஸ்.சி. பட்ட மேற்படிப்பு படித்த வெங்கடாச்சலம், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையில் பல்வேறு உயர் பதவிகளில் இருந்துள்ளார்.

இதனையடுத்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தற்காலிக புதிய தலைவராக ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு நியமனம் செய்யப்பட்டார். மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்த 24 மணி நேரத்தில், தலைமை செயலாளர் இறையன்பு இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்தார். வனத்துறை தொடர்பான ஆக்கப்பூர்வமான பணிகளில் அதிகம் கவனிக்கப்பட்டவர் சுப்ரியா சாகு என்பது குறிப்பிடத்தக்கது அதனையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக உதயன் நியமனம் செய்யப்பட்டார். 

click me!