
அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் வாக்களிக்கும் இடங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடியில் வாக்களிக்கவிருக்கிறார்.
சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினும் இதே வாக்குச்சாவடியில் வாக்களிக்கிறார். முன்னாள் முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் உள்ள பிரம்மஞானம் நடுநிலைப்பள்ளியில் வாக்களிக்கிறார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பீமன்ன கார்டன் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியில் வாக்களிக்கிறார்.
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கிராம பஞ்சாயத்து பகுதியில் இருப்பதால் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்து விட்டார். அதே போல பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்துவிட்டார்கள். இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் ஊரகப் பகுதியில் வாக்களித்து விட்டார். எனவே இவர்களுக்கு இந்த தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு கிடையாது.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோடு திருவள்ளுவர் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வாக்களிக்கிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் ஆலப்பாக்கம் வேளாங்கண்ணி பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போடுகிறார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர் திண்டிவனம் நகராட்சி 19-வது வார்டில் உள்ள ரொட்டிக்கார தெரு தாகூர் மேல்நிலைப்பள்ளியில் வாக்களிக்கிறார்கள். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிதம்பரம் நகராட்சி 7-வது வார்டில் உள்ள நகராட்சி பள்ளியில் வாக்களிக்கிறார்.