ஜவ்வாய் இழுத்தடிக்கும் திமுக... ஜாடை காட்டாத அதிமுக... தமிழகத்தில் பெரும் அரசியல் குழப்பம்!

By Asianet TamilFirst Published Jan 25, 2019, 1:24 PM IST
Highlights

தமிழகத்தில் கூட்டணியை ஓரளவுக்கு இறுதி செய்துவிட்ட கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றன. இன்னொரு புறம் கூட்டணியே இறுதி செய்யாத கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து வருகின்றன.

தமிழகத்தில் கூட்டணியை ஓரளவுக்கு இறுதி செய்துவிட்ட கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றன. இன்னொரு புறம் கூட்டணியே இறுதி செய்யாத கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து வருகின்றன.

நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ளன. மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் இதுவரை திமுக கூட்டணி மட்டுமே ஓரளவுக்கு இறுதி ஆகியிருக்கிறது. 

இன்றைய நிலவரப்படி அந்தக் கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. வேறு கட்சிகள் கூட்டணியில் இடம் பெறுவது பற்றி இதுவரை உறுதியாக எந்தத் தகவலும் இல்லை. கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுவிட்டது. துரைமுருகன் தலைமையிலான குழுவில் திமுகவின் சீனியர்கள் 5 பேர் இடபெற்றுள்ளனர். 

திமுக குழு அமைத்து 5 நாட்கள் ஆகிட்ட நிலையில், அந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த குழு எதையும் இன்னும் அமைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி சார்பில் குழு அமைக்க மேலிடத்தின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது. மதிமுக, இடதுசாரிகள், விசிக போன்ற கட்சிகளும் இதுவரை குழுவை அமைக்கவில்லை. பிப்ரவரிக்குள் தொகுதி பங்கீடு, போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்துவிட்டு பிரசாரம் மேற்கொள்ள திமுக திட்டமிட்டுவருகிறது. 

ஆனால், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் குழுவை அமைத்த பிறகே பேச்சுவார்த்தை தொடங்கும் என்பதால், அதற்காக திமுக காத்திருக்கிறது. என்றாலும் இன்னும் சில தினங்களில் திமுக கூட்டணி கட்சிகள் குழுவை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் நிலைமை இப்படி இருக்க, அதிமுகவில் எந்தக் கட்சி கூட்டணியில் இடம் பெறபோகிறது என்பது பற்றி அதிகாரபூர்வமாக இதுவரை எந்தத் தகவலும் பகிரப்படவில்லை. 

அதிமுக கூட்டணி குறித்து அனுமானமாகவே செய்தி வெளியாகிவருகிறது. கூட்டணியே இதுவரை இறுதி செய்யப்படாத நிலையில், பேச்சுவார்த்தை நடத்த அதிமுக சார்பில் ஐவர் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக தொகுதி பங்கீடு தொடர்பாக மட்டுமே அதிமுக குழு பேச்சுவார்த்தை நடத்தும். ஆனால், இப்போது அமைக்கப்பட்டுள்ள குழு, கூட்டணி தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகத் தெரிகிறது. அதிமுகவை போலவே கூட்டணியே முடிவு செய்யாத நிலையில், பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக குழு அமைத்துள்ளது.

click me!