அப்போ ஒரு பேச்சு... இப்ப ஒரு பேச்சா..? விஜயகாந்த் சொன்னது அவ்ளோதானா?

By Asianet TamilFirst Published Jan 25, 2019, 12:22 PM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக கூட்டணி அமைத்துள்ளதன் மூலம், அந்தக் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது. 

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக கூட்டணி அமைத்துள்ளதன் மூலம், அந்தக் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது. 

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து தேமுதிக போட்டியிட்டது. தேர்தலுக்கு பிறகு அந்தக் கூட்டணி இருக்கும் இடம் தெரியாமல் போனது. அதில் இடம்பெற்றிருந்த மதிமுக, இடதுசாரிகள், விசிக ஆகிய கட்சிகள் திமுக கூடாரத்துக்கு தாவின. தேமுதிக அமைதி காத்து வந்தது. 

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், “2019 பாராளுமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும். அனைத்து தொகுதியிலும் போட்டியிட்டு தேமுதிக வெற்றிபெற்று மக்கள் பணி ஆற்றும். மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பணியாற்ற அனைவரும் பாடுபடவேண்டும்” என்று தொண்டர்களிடம் விஜயகாந்த் கேட்டுக்கொண்டார். இதனால், தொடக்கக் காலத்தைப்போல விஜயகாந்த் கட்சி தனித்து போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 

ஆனால், அண்மை காலமாக அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. அமமுகவுடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் தேமுதிகவிடமிருந்து வரவில்லை. இந்நிலையில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த சுதிஷ் தலைமையில் குழு அமைத்து தேமுதிக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

 

இதன்மூலம் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது. ஆனால், ஏற்கனவே விஜயகாந்த் தெரிவித்த கருத்துக்கு மாறாக, தற்போது கூட்டணி அமைத்து போட்டியிட தேமுதிக முன்வந்திருக்கிறது. தற்போதைய நிலையில், எந்தக் கூட்டணியில் தேமுதிக இணைந்து போட்டியிடும் என்பதுதான் அந்தக் கட்சி தொண்டர்கள் மத்தியில் உள்ள ஒரே கேள்வியாக உள்ளது.

click me!