
’பதவியை பறிச்சாச்சு! இனி அரெஸ்ட் மேளா துவக்கம்!’ என்று நம் இணையதளத்தில் எழுதிய பிறகு பரவலாக அந்த விவகாரம் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு நீட்சியாக 8 அல்லது 7 எம்.எல்.ஏ.க்கள் கைதாக வாய்ப்பிருப்பதாக கிளம்பியிருக்கும் தகவல்கள் கிறுகிறுக்க வைக்கின்றன.
தினகரன் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அறிவித்த அடுத்த ஒரு மணி நேரத்தில் தினா அணி குழுமியிருக்கும் கர்நாடக மாநிலம் குடகில் முகாமிட்டது மத்திய குற்றப்பிரிவு போலீஸ். குறிப்பாக மாஜி போக்குவரத்து துறை அமைச்சரும், தற்போது தினா அணியிலிருக்கும் எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜியை விசாரணை வளையத்தில் கொண்டு வரவே போலீஸ் அங்கே குவிந்துள்ளதாக பேச்சு எழுந்தது.
கடந்த 2016_ல் சென்னை நீலாங்கரையை சேர்ந்த கோபி உள்ளிட்ட 40 பேர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தனர். அதில் போக்குவரத்து துறையில் பணி வாங்கி தருகிறேன் என்று சொல்லி சில கோடிகள் ஏமாற்றிவிட்டார் என்று புகார் தந்திருந்தனர். இதை விசாரிக்கவே சி.சி.பி. போலீஸ் குடகுவில் வட்டமிட்டது என்கிறார்கள்.
செந்தில் பாலாஜி போக இன்னும் சில எம்.எல்.ஏ.க்களின் பழைய வழக்குகளும் தூசிதட்டப்பட்டுள்ளன. மாஜி உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனை நாமக்கல் காண்ட்ராக்டர் சுப்பிரமணியனின் மர்ம மரணத்தில் அமுக்க முயலலாம் என்று முயன்ற போலீஸுக்கு தற்காலிக தடை விழுந்துள்ளது.
ஆனாலும் அவரை ஆப்ஷனில் விட்டுவிட்டு இன்னும் சிலரின் பழைய ஜாதகத்தை குடைய துவங்கியுள்ளது போலீஸ். அந்த நபர்கள் குடகிலிருந்தாலும், தொகுதிக்குள் நுழைந்தாலும் நிழலாய் தொடர்ந்து விசாரணை எனும் வலையை போலீஸ் வீசுவது நிச்சயம் என்கிறார்கள்.
ஆனால் இந்த முயற்சிகள் அரெஸ்டில் முடிந்து அதிர்வலையை ஏற்படுத்துமா அல்லது எதுவும் வேலைக்கு ஆகாமல் போய் அம்மாஞ்சியாகுமா என்பதுதான் புதிராய் இருக்கிறது. காரணம், முன் ஜாமீன் விஷயத்தில் தினகரன் அணி கில்லியாக இருப்பதுதான் என்கிறார்கள்.