
கமல் _ ரஜினி இருவரும் அரசியல் இலக்கை நோக்கி முன்னேறுவதை வைத்து ஆயிரத்தெட்டு அனுமானங்கள், விமர்சனங்கள், வியாக்யானங்கள் நாள்தோறும் கிளம்பிக் கொண்டேயிருக்கின்றன. தங்கள் கவனத்துக்கு வரும் அவை அத்தனையையும் மிக உன்னிப்பாக மனதிலேற்றிக் கொள்கின்றனர் இருவரும். எதற்கும் பயன்படுமென்கிற கணக்கு.
இந்நிலையில் இருவரின் அரசியல் பிரவேசம் குறித்து இன்று கிளம்பியிருக்கும் ஒரு பார்வை ரஜினியை உஷ்ணப்படுத்துவதாகவும், கமலின் ஆழ் மனதில் ஒரு பரவச பட்டாம்பூச்சியை சிறகடிக்க விடுவதாகவும் அமைந்துள்ளதாக விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
அப்படியென்ன பார்வை அது!...
தான் நிச்சயம் அரசியலுக்கு வரப்போகிறேன் என்பதை சமீபத்தில் உறுதி செய்த கமல், தனிக்கட்சி துவங்கும் யோசனையிலும் இருப்பதை கூறினார். அதேவேளையில் அரசியலில் சுய விருப்பத்தை விட அழுத்தமே காரணம் என்றும் நெத்தியடியாக கூறினார்.
அது என்ன அழுத்தம்?...என்று கேட்டால் தமிழக அமைச்சர்கள் கமலுக்கு எதிராக தொடுத்த வார்த்தை போர்தான் என்பது பொதுவான காரணமாக அர்த்தப்படுத்தப்படுகிறது.
ஆனாலும் அதைத்தாண்டி கமலின் அரசியல் பிரவேசத்தில் உள்ளீடாக சில விஷயங்கள் இருக்கின்றன என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். அதாவது என்னதான் தமிழக அமைச்சர்களுடனான கமலின் கருத்து மோதல் உச்சத்திலிருந்தாலும் அது காலப்போக்கில் தானாக காணமல் போயிருக்கும். ஏற்கனவே விஸ்வரூபம் ரிலீஸ் நேரத்திலும், சென்னையை வெள்ளம் சூழ்ந்த நேரத்திலும் இப்படியானவை எழுந்து அடங்கியது. ஆனால் கமல் இப்போது அதையும் தாண்டி இந்த விவாதத்தையும், பரபரப்பையும் நீட்டிப்பதும், அரசியலுக்கு வருவேனென்று சொல்வதற்கும் மிக முக்கிய காரணம் ரஜினியே! என்கிறார்கள்.
இது என்ன புது கதை? என்று கேட்டால்...என்னதான் கமலும் ரஜினியும் போட்டி நடிகர்களாக இருந்தாலும் கூட இருவருக்குமிடையில் ஆத்மார்த்தமான நட்பு என்றுமே உண்டு. அவரது ரசிகர்கள்தான் மோதிக் கொள்வார்களே தவிர இருவரும் மோதிக்கொண்டது கிடையாது.
இருவரின் படங்களும் விழாக்காலங்களில் மோதும். இருவரின் படங்களும் ஜெயிக்கும் அல்லது இருவரில் ஒருவர் ஜெயிப்பார். அது பெரும்பாலும் ரஜினியாக இருக்கவே வாய்ப்பு அதிகம். ஆனால் அதை இருவருமே ஸ்போட்டீவாகத்தான் எடுத்துக் கொண்டு அடுத்த படத்துக்கு கமிட் ஆவார்கள்.
ஆனால் ரஜினி மீதான ஆத்மார்த்தமான நட்பை தாண்டி கமலிடம் ஒரு சின்ன ஏக்கம் இருந்தது. அதாவது தான் இதே தமிழ் மண்ணை சேர்ந்தவன், சிறு பிள்ளையாக இருக்கும்போதிருந்தே சினிமாவோடு வளர்ந்தவன், தோற்றம் நடனம் நடிப்பு என்று சகலகலா வல்லவனாகவே இருப்பவன் ஆனாலும் எங்கிருந்தோ இடையில் வந்த ரஜினி ஜஸ்ட் லைக் தட் ஆக எல்லாவற்றையும் தட்டிக் கொண்டு முதலிடத்துக்கு வந்துவிட்டாரே! என்பதுதான்.
ரஜினி முதலிடத்துக்கு வந்தார் என்பது மட்டுமில்லை, நீண்ட நெடுங்காலமாக முதலிடத்தில் மட்டுமே இருக்கிறார்! என்பதே ஆதங்கத்தின் அடிப்படை. தமிழ் சினிமாவை பற்றி பேசும்போது ‘ரஜினி, கமல்’ என்று தன்னை இரண்டாவதாக வைத்தே பேசுவதும் கமலுக்கு மிகப்பெரிய மன வருத்தம். ’எல்லாமே இருக்கிறது என்னிடம்! ஆனாலும் நான் ஏன் முதலிடத்தில் இல்லை?’ என்பதே கமலின் அதி நியாயமான கேள்வி. ஆனால் நெடுங்காலமாக இந்த கேள்விக்கு பதிலில்லை. இனி கிடைத்தாலும் அது பிரயோஜனமில்லை. காரணம் வயது கடந்துவிட்டது!
ஆனாலும் கமலுக்குள் அந்த நெருப்புக் கேள்வி கனன்று கொண்டேஇருந்த வேளையில்தான் இந்த அரசியல் பஞ்சாயத்து கிளம்பியது. அமைச்சர்களுடனான கருத்து மோதலை ஒரு கட்டத்தில் நிறுத்திவிட்டு அடுத்த பட வேலைக்கு போயிருப்பார் கமல். ஆனால் ரஜினியின் அரசியல் முயற்சி அவரை சட்டென்று திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது.
ரஜினி இதற்கு முன் பல முறை அரசியல் பிரவேச சீன் போட்டிருக்கிறார்தான். ஆனால் அது வெறும் நடிப்பே என்பது உலக நடிகனான கமலுக்கு தெரியும். ஆனால் இந்த முறை ரஜினியின் போக்கு அப்படியில்லை. பல பத்திரிக்கையாளர்கள், அர்ஜூன்சம்பத், தமிழருவி மணியன் உள்ளிட்ட பலரை அவர் சந்தித்தது ரஜினி ஒரு முடிவெடுத்துவிட்டதை கமலுக்கு உணர்த்தியது.
இந்த சூழலில் அமைச்சர்கள் அதிகமாய் தன்னை உரசி, தனது தன்மானத்தை உசுப்பிவிட, கமலுக்குள் உறங்கிக்கொண்டிருந்த சிங்கம் விழித்துக் கொண்டது. அதனால்தான் மளமளவென அரசியல் பிரவேசம் தொடர்பான கருத்துக்களை கொட்ட துவங்கியிருக்கிறார்.
ஆயிரம் திறமைகளிருந்தும் ரஜினியிடம் சினிமாவில் தோற்ற கமல், அரசியலில் அவரிடம் எந்த நிலையிலும் தோற்றுவிடக்கூடாது என்கிற முடிவில் இருக்கிறார். இந்த மண்ணின் பிள்ளையான தான் கைகட்டி நிற்க, எங்கிருந்தோ வந்த ரஜினி இந்த தமிழர்களின் ஆபத்பாந்தவனாக மாறுவதை கமலால் ஏற்க முடியவில்லை என்பதே யதார்த்தம். அதனாலேயே ரஜினியை முந்திக் கொண்டு தான் இறங்கியிருக்கிறார்.
சினிமாவை போல் இதில் தன் திறமையை தமிழர்கள் ஏமாற்றிவிட மாட்டார்கள் என்பதே கமலின் நம்பிக்கை. காரணம் அது சினிமா, இது அரசியல். அது நிழல் இது வாழ்க்கை. அது கற்பனை, இது யதார்த்தம். எனவே தன்மான தமிழர்கள் தன்னையே முன்னிலைப்படுத்துவார்கள் என்று கமல் திட்டவட்டமாய் நம்புகிறார். தமிழனும் அதற்கேற்றார்போல்தான் கமலின் அரசியல் பேச்சுக்கெல்லாம் தலையாட்டி ஒத்து ஊதுகிறான்.
கமலின் இந்த சரவெடியில் அதிர்ந்து போன ரஜினி அண்ட் கோ “அதான் அவரு வர்றேன்னு சொல்லிட்டாருல்ல. நீங்க என்ன சார் திடீர்னு” என்று கேட்டபோது உலகநாயகன் சற்றும் யோசிக்காமல் “தாராளமா அவரும் வரட்டும், நானும் வர்றேன். ஆயிரம் பேர் வந்தாலும் இங்கே பண்ண வேண்டிய நல்ல விஷயங்கள் லட்சக்கணக்கில் இருக்குது.” என்றாராம்.
ஆக விஸ்வரூபமாய் எழுகிறார் கமல்!