
ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும் என்பது போல, தமிழக அரசு 100 நாள் சாதனை என விளம்பரம் செய்தாலும், அனைத்துத் துறைகளிலும் கடைசி இடத்தில்தான் உள்ளது என பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்… உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும் என்பதைப் போல, என்னதான் 100 நாள் சாதனை என்று ஊடகங்களில் விளம்பரங்களை வாரி இறைத்தாலும், விதிக்கப்பட்டது என்னவோ அனைத்துத் துறைகளிலும் கடைசி இடம் தான் போலிருக்கிறது.
மாநிலத்தின் வளர்ச்சிக்கு அவசியமான உழவு, உற்பத்தி, தொழில்துறை ஆகியவற்றில் தமிழகம் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள இந்திய மாநிலங்களின் வளர்ச்சி குறித்த புள்ளிவிவரக் கையேட்டில் இது தெரியவந்துள்ளதாகவும் குறிபிட்ட்டுள்ளார்.
மத்தியப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் வேளாண்மையில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்ட முடிந்திருப்பதற்குக் காரணம் அம்மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள பாசனத் திட்டங்கள் தான் எனவும், தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் திராவிடக் கட்சிகள் சொல்லிக்கொள்ளும்படியாக எந்த பாசனத் திட்டத்தையும் செயல்படுத்தாததால் தான் இரு ஆண்டுகளாக வேளாண் வளர்ச்சியில் தமிழகம் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உற்பத்தித் துறையிலும் தமிழகத்திற்கு கடைசி இடம் தான் எனவும், தமிழகத்தில் தொழில் தொடங்க முன் வந்த நிறுவனங்களையும், தமிழகத்தில் தொழில் செய்து வந்த நிறுவனங்களையும் ஊழல் என்ற ஆயுதம் கொண்டு கடந்த சில ஆண்டுகளாக விரட்டியடித்ததன் பயனைத் தான் தமிழகம் இப்போது அனுபவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்துத் துறைகளிலும் தமிழகம் பின்னடைவை சந்தித்து வருவதற்கு இரு முக்கியக் காரணங்கள் ஊழலும், நிர்வாகத் திறமையின்மையும் தான் எனவும், புதியக் கொள்கைகளை வகுத்து செயல்படுத்த தமிழக அரசுக்கு திறமையோ, துணிவோ இல்லை எனவும் சாடியுள்ளார்.
தமிழகத்தில் வேளாண்மை என்பது புறக்கணிக்கப்பட்ட துறையாக மாறி வருவதாகவும், இந்த வீழ்ச்சியை தடுக்கும் சக்தியும், திறனும் பினாமி அரசுக்கு இல்லாத நிலையில், இந்த அரசை அகற்றி விட்டு, வளர்ச்சிக்கான செயல்திட்டங்களை வகுத்து, செயல்படுத்தும் திறன் கொண்டவரின் தலைமையில் புதிய அரசை அமைப்பதே தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் எனவும் அன்புமணி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.