
பன்னீர் அணிக்கு போகாமல் இருக்க தம்மிடம் சசிகலா தரப்பினர் 30 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டது என்று பன்னீர் அணியை சேர்ந்த எம்.எல்.ஏ மனோகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக என்பது எடப்பாடி அணி, பன்னீர் அணி, தினகரன் அணி என தற்போது மூன்று அணிகளாக சிதைந்து கிடக்கிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களிக்க, எம்.எல்.ஏ-க்களுக்கு கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாக மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் பேசிய, காணொளி டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் கடந்த ஜூன் 16 ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டது.
இதுகுறித்து திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது.
இதையடுத்து, சட்டமன்றத்தில், கூவத்தூரில் எம்.எல்.ஏ க்களுக்கு பேரம் பேசப்பட்டது தொடர்பாக திமுகவினர், பிரச்சினையை எழுப்பி அவையில் இருந்து வெளிநடப்பும் செய்தனர்.
ஆனால், அப்போது பன்னீரோ, அவரது அணியில் உள்ள எம்.எல்.ஏ க்களோ இதுகுறித்து வாய் திறக்காமல் அமைதியாக இருந்து விட்டனர்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில், பன்னீர் அணியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ மனோகரன், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதும், சிறையில் இருந்தபோதும் பல யாகங்களை நடத்தியவர் பன்னீர்செல்வம் என்றார்.
மேலும், எடப்பாடி டப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.
சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்கள், ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள். அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொண்டு கட்சியை நடத்தப் பார்க்கிறார்கள்.
நான் பன்னீர்செல்வம் அணிக்கு போகக்கூடாது என்று, சசிகலா தரப்பினர் என்னிடம் 30 கோடி ரூபாய் வரை பேரம் பேசியது உண்மைதான். சசிகலா அணியில் 30 கோடி ரூபாய் வரை பேரம் பேசினாலும் நான் அங்கு போகவில்லை.
122 எம்எல்ஏ-க்களை வைத்து நடத்தும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி, ஒரு பினாமி ஆட்சி. இந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும். தேர்தல் நடந்தால், பன்னீர்செல்வம்தான் முதலமைச்சர் என்றும் மனோகரன் தெரிவித்தார்.
ஆனால், இதுகுறித்து சட்டமன்றத்தில் காரசாரமான விவாதம் நடந்தபோது, எம்.எல்.ஏ மனோகரன் இதை எதற்காக, தெரிவிப்பதற்கு மறுத்தார் என்று கேள்வி எழுந்துள்ளது.