அதிமுக.வை ஆக்கிரமிக்கும் அசாதாரன சூழ்நிலை...- அணி மோதல்கள் வேறு வடிவில் வெடிக்கும் அபாயம்!

First Published Jun 26, 2017, 4:46 PM IST
Highlights
Fight and twist at ADMK Party team leaders and supporters


கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று எந்த கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து ஜெயலலிதா பெருமைப்பட்டாரோ அதே கட்சிக்குள் இப்போது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நண்பர்களே இல்லை.

சசிகலா அணி, எடப்பாடி அணி, பன்னீர் அணி, தினகரன் அணி (சசியை ஆசி வழங்கும் ராஜமாதாவாகவும், தினகரனையே தலைவராகவும் நினைப்பவர்கள் இருக்கும் அணி.), தீபா அணி என்று துண்டாடப்பட்டுக் கிடக்கிறது அக்கட்சி. இதுவரையில் ஒருவருக்கொருவர் தர்க்க ரீதியான மோதலில்தான் ஈடுபட்டுக் கிடந்தார்கள். 

ஆனால் இன்றோ விவகாரத்தின் ரூட்டே வேறு மாதிரியாக மாறுகிறது. தினகரன் கட்சிக்குள் இருந்து கொண்டு குடைச்சல் கொடுக்க கூடாது அவர் கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று அரக்கோணம் எம்.பி.யான அரி நீட்டி  முழக்கி பேட்டிக் கொடுத்துள்ளார். (எந்த வித ஜனரஞ்சக தொனியுமில்லாமல், ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கான தெளிவு நடையுமில்லாமல் அரி பேசுவதை கேட்கும்போது நமக்கே எரிச்சல் வருகிறதே. அப்போ தினகரனுக்கு எப்படியிருக்கும்?)

இதற்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலடி கொடுத்திருக்கும் தினகரன் அணியின் தடாலடி எம்.எல்.ஏ.வான வெற்றிவேல் “அரி போல் தான் தோண்றித்தனமாக  பேசுபவர்களை எடப்பாடி கண்டிக்க வேண்டும்.” என்று சொன்னவர், ’இல்லையென்றால் என்ன நடக்கும் என்று கேட்பீர்களேயானால்...அரி போன்றவர்களை கிள்ளி எறிவது எப்படி? என்பது எங்களுக்கு தெரியும். இப்படியான பேச்சுகள் தொடர்ந்தால் தேவையில்லாத சூழல் உருவாவதை தடுக்க முடியாது.” என்று மிரட்டலாக விளக்கம் கொடுத்துள்ளார்.

அரியின் பேச்சு காமெடியை தருகிறதென்றால், வெற்றிவேலின் பேச்சு அதிர்ச்சியூட்டுகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அவர்கள் மேலும் இது பற்றி பகிரையில் “தர்க்க ரீதியாக மோதிக் கொண்டிருந்த அ.தி.மு.க.வின் அணிகள் வேறு மாதிரியான மோதலுக்கு தயாராகும் சூழல் புரிகிறது. அரி போன்ற சம்பந்தமில்லாத குரல்கள் முளைப்பதும், அதற்கு பதிலடியாக வெற்றிவேல் மிரட்டல் குரல் கொடுப்பதும் அசாதாரண நிலை அ.தி.மு.க.வை ஆக்கிரமிக்கும் சகுணமாகவே இருக்கிறது.

வெற்றில்வே சாதாரண அரசியல்வாதியல்ல. தனக்கு ஆகாத சைதை துரைசாமியை அவர் மேயராக இருக்கும் காலத்திலேயே அதுவும் ஜெயலலிதா உடல் நலனோடு ஆண்டு கொண்டிருக்கையிலேயே அமைச்சர்களின் கண் எதிரே நடுரோட்டில் விரட்டித்தாக்கியவர். அப்பேர்ப்பட்ட வெற்றிவேல், ஜெயலலிதா மறைந்துவிட்ட இந்த சூழலில் எந்த பயமுமில்லாமல் எந்தளவுக்கு இறங்கி அடித்து அரசியல் செய்வார் என்று யூகித்துக் கொள்ளலாம்.

தேவையில்லாத சூழல் உருவாவதை தவிர்க்க முடியாது என்று வெற்றிவேல் சொல்வது எதிரணிகளுக்கு தினகரன் அணி எம்.எல்.ஏ. விடுக்கும் பகிரங்க மிரட்டலாகவே இதை எடுத்துக் கொள்ளலாம்.

ஆக கூடிய விரைவில் அ.தி.மு.க.வில் கைகலப்பில் ஆரம்பித்து கடுமையான மோதல்கள், ஆயுதப்பிரயோகங்கள் போன்றவை நிகழ்ந்துவிடுமோ என்று அஞ்சிட தோண்றுகிறது.

ஜனநாயக வழியில் நடப்பதாக சொல்லும் தி.மு.க.வில் உட்கட்சி பிரச்னைகளால் பெரும் தலைகள் நடைபயிற்சியின் போது குரூரமாக கொல்லப்பட்ட சம்பவங்கள் ஏராளம். ஆனால் தலைமை இல்லாமல் தடுமாறும் அ.தி.மு.க.வில் உருவாகியிருக்கும் இந்த குழு மோதல்கள் மிகப்பெரிய ஆபத்திற்கான அபாயசங்காகவே எண்ண தோண்றுகிறது. தமிழக அரசியல் இந்தளவுக்கு மோசமடைய வேண்டாம்.” என்று அழுத்தமாக குறிப்பிட்டுள்ளனர்.

இப்படி எதுவும் நேர்ந்திடாமல் தடுக்க வேண்டியது பிரிந்து கிடக்கும் குழுக்களின் தலைவர்களின் கைகளில்தான் இருக்கிறது.

click me!