
சீமானின் கண்களுக்கு இப்போதெல்லாம் ரஜினி, ராஜபக்ஷேவை விட பயங்கரமாக தெரிகிறார். ரஜினியை போட்டுத் தாக்க வேண்டுமென்றால் ஆட்டோகேப்பில் புல்டோசரையே ஓட்டுகிறார் சீம்ஸ்.
தஞ்சாவூரில் அளித்திருக்கும் பேட்டியில் “தீபாவளிக்கு வைக்கும் பெரிய வெடி வெடிக்காமல் போவது போல் ரஜினியும் புஸ்வாணமாகி விடுவார்.” என்று கொத்தியெடுத்துள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வந்துவிடவே கூடாது என்று மல்லுக்கட்டி நிற்கும் முக்கிய மனிதர்களில் சீமான் முன் வரிசையில் நிற்கிறார். ‘தமிழ்நாட்டை தமிழர்தான் ஆளவேண்டும்.’ என்ற வாதத்தை மையப்படுத்தித்தான் ரஜினியை எதிர்க்கிறார். ஆனால் அரசியலில் ரஜினி என்கிற கான்செப்டுக்கு எதிராக சீமான் கிளர்ந்தெழுவதில் ஏதோ தன்னிச்சையான உந்துதல் இருப்பதாக தெரியவில்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். யாருடைய பின்னணியிலோதான் சீமான் கொடிபிடிக்கின்றார் என விமர்சிக்கின்றனர்.
‘தமிழ்நாட்டை தமிழர்தான் ஆளவேண்டுமென்றால் ஜெயலலிதாவை சீமான் அந்த அடிப்படையில் எதிர்க்காதது ஏன்? ஜெயலலிதாவை வீரமங்கை வேலுநாச்சியாரோடு ஒப்பிட்டு பேசியபோதெல்லாம் சீமானுக்கு அவர் தமிழரல்ல என்பது தெரியாதா! இப்போது ரஜினிதான் சீமானின் கண்களுக்கு கன்னடராக தெரிகிறாரோ.
சீமான் கொள்கைக்காக ரஜினியை எதிர்ப்பது போல் தெரியவில்லை. யாருடைய ஏஜெண்டாகவோ செயல்பட்டு ரஜினியை எதிர்க்கிறார்.” என்று தாக்குபவர்கள் அதே வேளையில்...
“கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் இடத்தை நிரப்ப ரஜினியாலேயே முடியும். அவர் ஒரு வசீகரமான தலைவர்.” என்று திருமாவளவன் ரஜினியை கொண்டாடுவதையும் போட்டுப் பொளக்கின்றனர்.
“திருமாவின் எண்ணம் ரஜினியை உயர்த்துவது இல்லை. ஸ்டாலினுக்கு இடைஞ்சல் தர நினைப்பவர் சம்பந்தமில்லாமல் அரசியலில் இல்லாத ரஜினியை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார். திருமாவுக்கு ஸ்டாலினுடன் முரணென்றால் அதை நேரடியான அரசியல் மூலம் காட்ட வேண்டும், போராட வேண்டுமே தவிர அவருக்கு எதிராக சம்பந்தமில்லாத ஒரு நபருக்கு கொம்பு சீவி விட்டும், பாராட்டு சோப்பு போட்டும் மக்கள் மன்றத்துக்குள் இழுப்பது நாட்டுக்கு நல்லதல்ல.” என்கிறார்கள்.
இப்படி ரஜினியை அழைப்பவர், எதிர்ப்பவர் இரண்டு பேரின் எண்ணங்களுக்குப் பின்னும் வேறொரு உந்துதல் இருக்கிறது. இதைப் புரிந்து கொள்ளாமல் ரஜினி இவர்களின் வார்த்தைகளையும், வாதங்களையும் எடைபோட்டு முடிவெடுத்தால் அது தவறானதாக மட்டுமே இருக்கும் என்றே எச்சரிக்கின்றனர் விமர்சகர்கள்.