
சசிகலா கூவத்தூர் செல்லவில்லை என்றால் அதிமுக ஆட்சி இருந்திருக்காது என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதிமுக எம்பியான கோ.அரி திருத்தணியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுகவை விட்டு டிடிவி தினகரன் விலக வேண்டும் என்றும் அவர் கூறினார். சசிகலாவையும், தினகரனையும் ஒதுக்கிவைப்பதில் அதிமுகவில் ஒருமித்த கருத்து நிலவுகிறது என்றும் எம்பி கோ.அரி தெரிவித்தார். லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தனது சொந்த கருத்துகளை கூறி குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்றும் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரனின் ஆதரவாளர் பேசியதாவது;
குடியரசு தலைவர் வேட்பாளர் ஆதரவு குறித்து, தம்பிதுரை மூலமாக பிரதமர் மோடி சசிகலாவிடம் ஆதரவு கேட்டது உண்மை என்றும் கூறினார். பிரதமர் மோடி, சசிகலாவிடம் ஆதரவு கேட்டதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது என்றார்.
ஆட்சியைக் காக்க பொது செயலாளராக சசிகலாவையும் துணைப் பொது செயலாளராக தினகரனையும் அறிவிக்க வேண்டும் என்று கூறினார். ஆட்சி 4 ஆண்டுகள் நடத்திச் செல்ல முடியும். கட்சியை எப்படி காப்பாற்றுவது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அதிமுக கட்சி சின்னம்மா கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், ஒரு அளவுக்குமேல் எதையும் என்னால் மறைத்து வைத்து கொண்டிருக்க முடியாது என்றும் வெற்றிவேல் எம்.எல்.ஏ. எச்சரிக்கை விடுத்தார். பொது செயலாளர் சசிகலாவின் கட்டுப்பாட்டில்தான் அதிமுக உள்ளது. இவ்வாறு வெற்றிவேல் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.