அய்யா ஒரு 2 டிஎம்சி தண்ணீர் கொடுங்க ! ஆந்திர அரசிடம் கெஞ்சும் தமிழக அதிகாரிகள் !

By Selvanayagam PFirst Published Jun 19, 2019, 8:03 AM IST
Highlights

சென்னையின் குடிநீர் தேவைக்காக, 2டி.எம்.சி., நீரை பெற  தமிழக அதிகாரிகள், ஆந்திராவில் தவமிருந்து வருகின்றனர். உரிய நேரத்தில் தண்ணீரை கேட்டுப் பெறாமல் அலட்சியமாக இருந்துவிட்டு தற்போது அங்கு டாப் அடித்திருக்கும் அதிகாரிகள் மீது பொது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.வடகிழக்கு பருவ மழை, 2018ல் ஏமாற்றியதாலும், சென்னையின் தேவைக்கு தொடர்ந்து தண்ணீர் எடுக்கப்பட்டதாலும், நான்கு ஏரிகளும் வறண்டு கிடக்கின்றன. 

இதனால், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள, நிலத்தடி நீர் ஆதாரங்களை பயன்படுத்தி, சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.

அவை போதுமான அளவில் இல்லாததால், சென்னையில், குடிநீர் பஞ்சம், தலைவிரித்தாடுகிறது.ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் பல மூடப்பட்டுள்ளன. வீடுகளை காலி செய்யும் நிலைக்கு, பொது மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதேநிலை தொடர்ந்தால், வரும் நாட்களில், குடிநீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

எனவே, தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, ஆந்திராவிடம் இருந்து தண்ணீர் பெறுவதற்கான இறுதி முயற்சிகளை, தமிழக அரசு மீண்டும் துவங்கியுள்ளது. இதற்காக, பொதுப்பணித் துறை செயலர் பிரபாகர், நீர்வளத் துறை முதன்மை தலைமை பொறியாளர் ஜெயராமன், பாலாறு கோட்ட கண்காணிப்பு பொறியாளர் கணேசன் உள்ளிட்டோர், ஆந்திர மாநிலம், விஜயவாடா சென்றுள்ளனர்.

அங்கு, ஆந்திர நீர்வளத்துறை செயலர், தலைமை பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து, சென்னையின் தேவை கருதி, கண்டலேறுஅணையில் இருந்து, 2 டி.எம்.சி., நீரை திறக்கும்படி வலியுறுத்திஉள்ளனர்.

கண்டலேறு அணையில், 4.45 டி.எம்.சி., நீர் மட்டுமே உள்ளது. மொத்தம், 11 டி.எம்.சி.,க்கு மேல் நீர் இருந்தால் மட்டுமே, சாய்கங்கை கால்வாயில் நீர் திறக்க முடியும் என, ஆந்திர அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.இருப்பினும், சென்னை நிலையை கருத்தில் கொண்டு நீர் திறக்கும்படி, அவர்கள் கேட்டுஉள்ளனர்.

இப்பிரச்னையை, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, நீர்வளத் துறை அமைச்சர் அனில்குமார் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக, ஆந்திர அதிகாரிகள் கூறியுள்ளனர்.

click me!