தமிழகத்தில் தொடரும் தண்ணீர் பஞ்சம் !! தண்ணீர் பிடிக்க தோண்டிய குழியில் விழுந்து 3 வயது சிறுமி பலி….

By Selvanayagam PFirst Published Jun 18, 2019, 10:11 PM IST
Highlights

புதுக்கோட்டை அருகே குடிநீர் பிடிக்க தோண்டிய குழியில் விழுந்து  3 வயது குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில்  தண்ணீர் பஞ்சம் உருவான பிரச்சனையில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழக தலைநகர் சென்னை உள்பட தமிழகம் முழுவதும்  வரலாறு காணாத அளவுக்கு குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. காலி குடங்களுடன் பெண்கள் தண்ணீருக்காக அலையும் பரிதாபம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.


 
தண்ணீர் பஞ்சம் காரணமாக சென்னையில் பல ஓட்டல்களில் மதிய சாப்பாடு இல்லை என்ற போர்டு தொங்கவிடப்பட்டுள்ளது. ஐடி நகரமான சென்னையில்  தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ஐடி கம்பெனிகளுக்கு விடுமுறை அளிக்கும் அவலம் ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலான கம்பெனிகள், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும்படி ஊழியர்களை அறிவுறுத்தி உள்ளன.

இதே போல்  காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் கோர தாண்டவமாடுகிறது. ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்க்கு விற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக  திருச்சி, தஞ்சை மாவட்டங்களில்  2 கொலைகள் நடந்து உள்ளன. தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் பஞ்சாயத்து குடிநீரை தனது வீட்டில் பதுக்கிய டிரைவரை தட்டிக்கேட்டு சமூக ஆர்வலர் ஆனந்தபாபு அடித்து கொல்லப்பட்டார். 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ளது உளுந்தங்குடியில்  தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில்  தனபால் என்பவர் அடித்து கொல்லப்பட்டார். இதேபோல் சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், அமரேசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் பிரச்சளை தொடர்பாக ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது.

இதனிடையே புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் கிராமத்தில்  குடிநீர் சரியாக வராததால் பள்ளம் தோண்டி  குழாயை தாழ்வாக பதித்து அதில் இருந்து தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தனர்.  இந்த நிலையில்  சமீபத்தில் பெய்த மழையால் அந்த குழியில் மழை நீர் தேங்கி இருந்தது. வைத்தூரை சேர்ந்த சந்திரசேகர் மற்றும் வெண்ணிலா தம்பதியரின் 3 வயது குழந்தை  பவதாரணி பக்கத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது அந்த குழியில் விழுந்து இறந்து விட்டது. 

click me!