Tamilnadu local body election 2022: வாக்காளர்களுக்கு பணம்.. தொக்கா சிக்கிய திமுக.. வெளியானது வீடியோ.

Published : Feb 18, 2022, 11:54 AM ISTUpdated : Feb 18, 2022, 12:54 PM IST
Tamilnadu local body election 2022: வாக்காளர்களுக்கு பணம்.. தொக்கா சிக்கிய திமுக.. வெளியானது வீடியோ.

சுருக்கம்

திமுக வட்ட பிரதிநிதிகளான அலாவுதீன், ஜாபர் முஸ்தபா ஆகியோர் அந்த வார்டுக்கு உட்பட்ட ஆழ்வார்தோப்பு பகுதியில் வாக்காளர்களின் பூத் ஸ்லிப்புகளை வாங்கி குறித்து வைத்துக்கொண்டு, ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில், திருச்சியில் திமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் 12,838  வார்டுகள் உள்ளன இந்த பதவிகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அப்பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதில் 2.50 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தத்தில் இது ஒரு மினி சட்டமன்றத் தேர்தலாகவே கருதப்படுகிறது. இந்த தேர்தலிலும் வழக்கம் போல அதிமுக - திமுகவுக்குமே நேரடி போட்டி நிலவுகிறது. 

பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி, அமமுக, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் தனித்து தேர்தலை சந்திக்கின்றன, இதனால் பன்முனை போட்டி நிலவுகிறது. நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் பரிசுப்பொருட்கள் விநியோகிப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 90 க்கும் அதிகமான பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடக்கும் பகுதிகள் மற்றும் அதைச் சுற்றி 5 கிலோ மீட்டர் வரை உள்ள பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று மாலை 6 மணி முதல் விடிய விடிய தேர்தல் பறக்கும் படையினர், போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பணிக்காக 1.13 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் நேற்று மாலை 6 மணி முதல் விடிய விடிய தேர்தல் பறக்கும் படையினர் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

மாநிலம் முழுவதும் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள், லாட்ஜ்கள் ரிசார்ட்டுகள் என அனைத்து இடங்களிலும் அதிகாலை வரை போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். நள்ளிரவு ஒரு மணி வரை நடந்த அதிரடி சோதனையில் தேர்தல் விதிகளை மீறி பணம் பட்டுவாடா செய்த நபர்களை பறக்கும்படையினர் பிடித்து பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மறுபுறம் முடிந்த அளவுக்கு அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் போன்றவற்றை வினியோகிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் திருச்சியில் திமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  திமுக ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் நகர்ப்புற தேர்தலை சந்திக்க உள்ளதால் எதிர்க்கட்சிகள் திமுக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.  சட்டமன்ற நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளையே திமுக நிறைவேற்றவில்லை என்ற விமர்சனம் அக்கட்சி மீது இருந்து வருகிறது.

இந்நிலையில்தான் திருச்சி மாநகராட்சி 29வது வார்டில்  திமுக சார்பில் போட்டியிடும் கமல் முஸ்தஃபாவுக்கு வாக்களிக்குமாறு பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. திமுக வட்ட பிரதிநிதிகளான அலாவுதீன், ஜாபர் முஸ்தபா ஆகியோர் அந்த வார்டுக்கு உட்பட்ட ஆழ்வார்தோப்பு பகுதியில் வாக்காளர்களின் பூத் ஸ்லிப்புகளை வாங்கி குறித்து வைத்துக்கொண்டு, ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வெளியானது முதல் திருச்சியில் மிகுந்த பரபரப்பு நிலவி வருகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் பறக்கும் படையினரும் ஆளுங்கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதை வேடிக்கை பார்த்து வருவதாகவும் குற்றச்சாட்டி வருகின்றனர்.

 

 

மேலும் பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்கனவே இது குறித்து அதிமுக சார்பில் தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சியில் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததற்கான வீடியோ ஆதாரத்துடன் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!