
இந்தியாவிடம் 18 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கும் இதே இலங்கை அரசு தான் இந்திய மீனவர்களாகிய தங்களை கைது செய்து துன்புறுத்துகிறது என தமிழகம் திரும்பிய மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடிக்கும் போது எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் அடிக்கடி சிறைபிடிக்கப்பட்டு அடித்து துன்புறுத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது. சில நேரங்களில் அவர்கள் நடத்தும் தாக்குதலில் மீனவர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்கதையாகி வருகிறது. இது குறித்து பல ஆண்டுகளாக மீனவர்கள் கத்தி கதறியும் இரு நாட்டு அரசுகளும் பெரிய அளவில் இது குறித்து கவனம் செலுத்தவில்லை என்பது பெரும் குறையாகவே இருந்து வருகிறது. சில நேரங்களில் மீனவர்களது விசைப்படகுகளை சிறைபிடித்து செல்லும் இலங்கை கடற்படை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மீனவர்களை சிறையில் அடைத்து வருகிறது. சில நேரங்களில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கையின் பேரில் மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களது படகுகள் விடுவிக்கப்படுவதில்லை.
இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டத்தை சந்திப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை அரசு ஏலம் விட்டது. இதை தடுக்க தமிழக அரசு எத்தனையோ நடவடிக்கை எடுத்தும் பலனளிக்கவில்லை. உடனே தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது. இந்நிலையில்தான் டிசம்பர் மாதம் இலங்கை அரசால் சிறைபிடித்து செல்லப்பட்ட இந்திய மீனவர்கள் தமிழக அரசின் முயற்சியால் விடுவிக்கப்பட்டுள்ளனர். விமானம் மூலம் சென்னை வந்த அவர்கள் இலங்கையிலிருந்து விடுதலை செய்வதற்கு முக்கிய காரணமாக இருந்த முதலமைச்சருக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படையால் கடந்த டிசம்பர் மாதம் சிறைபிடிக்கப்பட்ட 47 தமிழக மீனவா்கள், தமிழ்நாடு அரசு முயற்சியால் விடுவிக்கப்பட்டு, இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் மூலம் தமிழகம் திரும்பினர். தமிழகம் திரும்பிய மீனவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். சென்னை திரும்பிய மீனவர்களை தனி வேன் மூலம் ராமேஸ்வரம், புதுக்கோட்டைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீனவர் அந்தோணி, இலங்கை சிறையிலிருந்த போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறினர். ஆனால் மருத்துவரே இல்லாத இடத்தில் 5 நாட்கள் தனிமை படுத்தினர். இலங்கை சிறையில் துன்புறுத்தலுக்கு ஆளானோம். விடுதலை செய்வதற்கு முக்கிய காரணமாக இருந்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். எங்களது படகுகளை மீட்டு தர இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜனவரி 25-ம் தேதி விடுதலை செய்யப்பட்ட பிறகும் 15 நாட்களுக்கு மேலாக சிறையில் கொடுமைகளை அனுபவித்தோம். மேலும், 44 பேர் மீனவர்கள் சிறையில் உள்ளனர். அவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 13 வயது சிறுவனும் எங்களுடன் துன்புறுத்தலை அனுபவித்தனர். இலங்கையிருந்த இந்திய தூதரக அதிகாரிகள் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவில்லை இலாபகரமாக செயல்பட்டதுபோல் உணர்வதாக குற்றஞ்சாட்டினர்.
இலங்கைக்கு 18 ஆயிரம் கோடி இந்திய அரசு நிதியுதி செய்யும்போது இந்திய மீனவர்களான எங்களை கைது செய்து துன்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம் என கேள்வியெழுப்பிய மீனவர்கள் படகுகளை இழந்துள்ள எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் என்றும் இலங்கையில் சிக்கியுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.