வேறு வழியின்றி உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு!! நாளை முதல் அமல்

First Published Jan 28, 2018, 10:44 AM IST
Highlights
tamilnadu government reduce bus fare


பேருந்து கட்டண உயர்வுக்கு எழுந்த எதிர்ப்புகளை அடுத்து பேருந்து கட்டணத்தை தமிழக அரசு குறைத்துள்ளது. குறைக்கப்பட்ட புதிய கட்டணம் நாளை முதல் அமலுக்கு வரும் என அரசு அறிவித்துள்ளது.

டீசல் விலை உயர்வு, போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம், பராமரிப்பு செலவு, உதிரி பாகங்களின் விலை உயர்வு ஆகியவற்றை காரணம் காட்டி கடந்த 20ம் தேதி முதல் பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது. சுமார் 50% முதல் 100% பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அந்த சுமையை மக்களின் தலைமீது ஏற்றியது அரசு.

இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தினக்கூலி மற்றும் மாத ஊதியதாரர்கள் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்துள்ளனர். பேருந்து கட்டண உயர்வை கண்டித்து எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் மாணவர்களும் போராட்டங்களை நடத்தினர்.

அரசு செவிசாய்க்காததை அடுத்து, அரசு பேருந்தை புறக்கணித்துவிட்டு ரயில்கள், தனியார் பேருந்துகளில் மக்கள் பயணிக்கத் தொடங்கினர். இதனால் கட்டணத்தை ஏற்றியபோதும் அரசுக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை.

இந்நிலையில், வேறு வழியின்றி பேருந்து கட்டணத்தை தமிழக அரசு குறைத்துள்ளது. அதன்படி, சென்னை மாநகர பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் 23 ரூபாயிலிருந்து 22 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, குறைந்த பட்ச கட்டணம் 5 ரூபாயிலிருந்து 4 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மற்ற மாவட்டங்களில் உள்ள மாநகர, நகர பேருந்துகள், விரைவு, அதிவிரைவு, அதிநவீன சொகுசு என அனைத்து பேருந்துகளின் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு 4 கோடி ரூபாய் இழப்பு என்றபோதிலும் மக்களுக்காக கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
 

click me!